தமிழகம்

மாமல்லபுரத்தில் காதலியை கொன்று காதலன் தற்கொலை

செய்திப்பிரிவு

பிறந்த நாள் பரிசு கொடுப்பதாக கூறி மாமல்லபுரம் அழைத்து வந்து காதலியை கொலை செய்துவிட்டு காதலனும் அந்த இடத்திலேயே நேற்று முன்தினம் இரவு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை, கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் இருதய ராஜ். இவரது மகள் ஜெனிபர் புஷ்பா(20). இவர் நுங்கம் பாக்கத்தில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் பி.சி.ஏ. இறுதியாண்டு படித்து வந்தார். இதேபோல் செம்மஞ்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் காணிக்கை தாஸ். இவரது மகன் ஜான் மேத்யூ(22). இவர் பி.எஸ்.சி படித்துவிட்டு ஒரு இடத்தில் தையல் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமைதோறும் ஜெனிபர் புஷ்பா பாலவாக்கத்தில் உள்ள ஒரு தேவாலயத்துக்குச் செல்வது வழக்கம். அதே தேவாலயத்துக்கு ஜான் மேத்யூவும் செல்லும்போது, இருவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இறுதியாண்டு படித்து வந்த ஜெனிபருக்கு ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத் தில் வேலை கிடைத்துள்ளது. இதையடுத்து, ஜான் மேத்யூவுக்கு வேலையில்லாததைக் காரணம் சொல்லி அவரை மணக்க ஜெனிபர் புஷ்பா மறுத்துள்ளார்.

கடந்த மார்ச் 31-ம் தேதி ஜெனிபர் புஷ்பாவுக்கு பிறந்த நாள் வந்துள்ளது. அப்போது ஜான் மேத்யூ, ‘கடைசியாக உன் பிறந்த நாளை இருவரும் மாமல்ல புரத்தில் கொண்டாடுவோம். அங்கு உனக்கு நான் பரிசு தருகிறேன். அதன் பிறகு நாம் இருவரும் காதலை துண்டித்துக் கொள்வோம்’ என்று கூறியுள்ளார். இதனை ஜெனி பரும் ஏற்றுக் கொண்டார். பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் மாமல்லபுரம் வந்துள்ளனர்.

இரவு 7 மணிக்கு தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலால் ஜெனிபரை ஜான் மேத்யூ தாக்கியதைத் தொடர்ந்து அவர் உயிரிழந்தார். பின்னர், ஜெனிபரின் துப்பட்டாவை எடுத்துச் சென்ற ஜான்மேத்யூ அருகில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாமல்லபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இருவரது உடலும் பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT