தமிழகம்

போலீஸ் பக்ருதீனின் காதல் கதை

கே.கே.மகேஷ்

போலீஸ் காவலில் இருக்கும் பக்ருதீன் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் முதலில் முரண்டு பிடித்துள்ளார். உயர் போலீஸ் அதிகாரி ஒருவர், அவர் தோளில் கை வைத்தபடி, “உன் காதல் மனைவி உன்னை உதறித்தள்ளிய பிறகு தான், இப்படி மூர்க்கத்தனமாக மாறிட்டியா?” என்று கேட்டிருக்கிறார். அடுத்த நொடியே பக்ருதீனின் கண்கள் கலங்கிவிட்டன. தன் காதல் மனைவி பற்றி அந்த அதிகாரியிடம் புலம்பியதோடு, அதுவரை மறைத்த தகவல்களையும் போலீஸில் கொட்டியிருக்கிறார்.

கல் நெஞ்சையும் கரைத்த காதல் கதையை அறிய மதுரையில் நாம் விசாரணையை துவக்கினோம். “அடிக்கடி அடிதடியில் ஈடுபட்டு, சிறைக்குச் சென்று திரும்பியபோது, பக்ருதீனுக்கு ஏரியாவுக்குள் ஹீரோ இமேஜ் உருவானது. அப்போது மும்தாஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணைக் காதலித்தார். வயதில் பாதிதான் இருக்கும் அந்த பெண்ணும் விரும்பியிருக்கிறார்.

வயது பிரச்சினையில் பக்ருதீனின் குடும்பத்தினர் இந்த காதலை ஏற்கவில்லை.

பெண்ணின் தகப்பனாரிடம் போய், ‘அவன் மீது நிறைய வழக்குகள் இருக்கிறது. அது இன்னும் தொடரவும் வாய்ப்பிருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அவரோ, “என் மகளின் விருப்பமே முக்கியம் என்று கூறியுள்ளார். பெரிதாக விருப்பம் இல்லை என்றாலும் கூட, காதலர்களின் கட்டாயத்தால் அனுப்பானடியில் உள்ள பி.எஸ்.ஏ. மகாலில் 23.1.11ல் கறி விருந்துடன் தடபுடலாக திருமணம் நடந்தேறியது.

இஸ்லாம் முறைப்படி, மகராக (பணம், பொருள்) அந்தப் பெண்ணுக்கு பக்ருதீன் 2 பவுன் சங்கிலி கொடுத்தான். ஒரு பைசா கூட வரதட்சணை வாங்கவில்லை. ஏரியாவே அவன் கல்யாணத்தைப் பற்றித்தான் பேசியது” என்றார்கள் ஏரியாவாசிகள். யார் கண்பட்டதோ அந்த புதுவாழ்க்கை ஓராண்டு கூட நீடிக்கவில்லை.

இதுகுறித்து அந்தப் பகுதி இளைஞர் ஒருவர் கூறுகையில் “திருமணத்தின் போது அந்தப் பெண்ணுக்கு வெறும் 14 வயது தான். பாவம், குடும்பம் நடத்தும் அளவுக்கு பக்குவமும் இல்லை. பக்ருதீனுக்கு மனைவி மீது அளவுகடந்த பாசம். ஆனால், தீவிரவாதத் தொடர்பு மற்றும் போலீஸ் தொந்தரவு காரணமாக அவனால், நிம்மதியாகக் குடும்பம் நடத்த முடியவில்லை. இப்பிரச்சினையில், இரு வீட்டாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்த நிலையில் தான் அத்வானி செல்லும் பாதையில் குண்டு வைத்த வழக்கில் பக்ருதீன் முக்கிய குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். இதில், பெண் வீட்டார் பயந்து போய்விட்டார்கள். அப்போது அந்தப் பெண்ணை விசாரணைக்காக அழைத்துச் சென்ற போலீஸார், ‘நீ குலா (பெண் கேட்கும் விவாகரத்து) கேட்டால், உன் கணவன் ஓடி வந்துவிடுவான். அவனை விசாரிப்போம். அவன் தப்பு செய்யவில்லை என்றால் உன்னோடு சேர்த்து வைத்துவிடுகிறோம்" என்று சொல்லி இருக்கிறார்கள்.

சதி திட்டம் புரியாமல், விவாகரத்து கொடுக்கும்படி, பெண் வீட்டார் நிர்பந்திக்க ஆரம்பித்தனர். போலீசுக்கும் புகார் போனது. கணவன் இல்லாத போது நாங்கள் எப்படி தலாக் கொடுக்க முடியும் என்று முதலில் முரண்டு பிடித்த மாப்பிள்ளை வீட்டார், வேறு வழியில்லாமல், 20.10.2012 அன்று தலாக் கொடுத்தனர் அந்தப் பெண்ணிடமும், அவளது தந்தையிடமும் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிவிட்டார்கள்” என்றார் சோகமாக.

பக்ருதீன் மனதை ரணமாக்கிய காதல் கதை இது தான். இதன் பிறகு அவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்போது வெறும் 17 வயதே ஆகும் அந்தப் பெண்ணும் மறுமணம் செய்துகொள்ளவில்லை. காதல் வாழ்வை தொலைந்து போனநிலையில் மருந்துக்கடையிலும், இரும்புப்பட்டறையிலும் வேலைபார்த்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார் இந்த இளம்பெண்.

சிறைக்குள் கணவன்: மனைவிக்கு விடுதலை

மதுரை சுங்கம்பள்ளிவாசல் முஸ்லிம் ஜமாத்தார்கள் முன்னிலையில் எழுதப்பட்ட அந்த விடுதலைப் பத்திரத்தில், மும்தாஜ் கூறியதில் இருந்து...

"இன்னார் மகளாகிய எனக்கும் பக்ருதீன் அலி அகமதுவுக்கும் கடந்த 23.1.2011 அன்று சுங்கம்பள்ளி ஜமாத்தாரால் நிக்காஹ் நடத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் என் கணவர் கடந்த 28.10.2011 (அன்று தான் அத்வானி செல்லும் பாதையில் பைப் வெடிகுண்டு பிடிபட்டது) முதல் என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டார். அதன்பிறகு, அவரை நான் சந்திக்கவோ தொடர்பு கொள்ளவோ முடியாத அளவுக்கு ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டேன். எனது வாழ்க்கைக்குத் தேவையான ஜீவனாம்சத்தை எனது கணவரோ, அவரது குடும்பத்தினரோ கொடுக்காத காரணத்தாலும், அவரது மனைவி என்ற அடிப்படையில் எந்த பிரயோஜனத்தையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்க முடியாத நிலையில் இருக்கிறேன்.

எனவே, இதுதொடர்பாக கடந்த 8.9.2012 அன்று நான் மாநகர் காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தேன். மணமுறிவு சம்பந்தமாக ஜமாத்தை அணுக அறிவுறுத்தினர். அதன்படி, 20.6.12ல் ஜமாத் நிர்வாகிகள் இரு குடும்பத்தினரையும் அழைத்துப் பேசி தீர்வு கண்டார்கள்.

அதன்படி, அவரிடம் இருந்து எந்த பிரயோஜனத்தையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும் நிலையில் நான் இல்லை. என்னை அவர் வாழ வைப்பதற்கான முகாந்திரம் எதுவுமே இல்லை என்பதால் இஸ்லாமிய ஷரீஅத் சட்டப்படி, அவரை இதில் கையொப்பம் இட்டுள்ள சாட்சிகள் முன்னிலையில் இன்று (20.11.12) அன்று குலா என்ற விவாக விடுதலை செய்துவிட்டேன்.

இன்றில் இருந்து எனக்கும் அவருக்குமான திருமண உறவு முறிந்துவிட்டது. எதிர்காலத்தில் எனக்கும் பக்ருதீன் அலி அகமதுவிற்கும் எந்தவித பின்தொடர்ச்சியோ, உறவோ இல்லை என்று உறுதி கூறுகிறேன். இப்படிக்கு மும்தாஜ். இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கிறது.

SCROLL FOR NEXT