அழுவதற்கும் சிரிப்பதற்கும் இவர்கள் வாழ்க்கையில் அர்த்தம் இல்லை. அம்மாவின் அன்பையும் ஆதரவையும்கூட உணர முடியாதவர்கள். வளர்ந்தும் வளராத குழந்தைகளாய், கணக்கற்ற குடும்பங்களை கவலையின் பிடியில் வைத்திருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டோர் மீதான அக்கறை அனைவரும் உணரப்பட வேண்டிய அம்சமாகும்.
கடந்த வாரத்தில் ஒரு நாள்..
நெய்வேலி அருகே அம்மா, அப்பா, அண்ணன், தம்பி என அனைவரின் அன்பிலும் அரவணைப்பிலும் இருந்த, மனநிலை பாதிக்கப்பட்ட ஓர் இளைஞர், தனது வீட்டருகே வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறார். அவ்வழியே வந்த ஒருவர் விளையாட்டாய் அவரை கம்பால் தட்ட, நிலைமை விபரீதம் ஆகியிருக்கிறது. அவரை மனநோயாளி சம்மட்டியால் ஓங்கி அடித்ததில் அந்த இடத்திலேயே அவர் இறந்து விட்டார். என்ன செய்தோம் என்பதையே அறியாமல் அந்த மன நோயாளி நின்றிருக்கிறார். பாதிக்கப்பட்ட தரப்பு, மனநோயாளியின் வீட்டை அடித்து நொறுக்கி அனைத்து பொருட்களையும் சூறையாடிவிட்டது.
இங்கே தவறு செய்தது யார்? தண்டனைக் குரிய வர்கள் யார்? யாரெல்லாம் இதற்கு பொறுப்பு?
இப்படி நிறைய கேள்விகள். பதில்கள்தான் இல்லை. எந்தத் தவறும் செய்யாத ஒரு குடும்பத் தலைவனின் உயிர் பறிக்கப்பட்டுவிட்டது. தங் களது மனநோயாளி மகன் செய்த காரியத்துக்காக வாழ வழி தெரியாமல் நிம்மதியைத் தொலைத்து ஓடிக் கொண்டிருக்கிறது மற்றொரு குடும்பம்.
விழிப்புணர்வு இல்லை
மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து மனநோய் குறித்த அச்சமும், விழிப்புணர்வும் இல்லாமலே சமூகம் இருக்கிறது. போதிய மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் மனநோய் தீர்க்க முடியாத நோயாகவே கருதப் படுவதால் மன நோயாளிகளை பராமரிக்க முடியா மல் பலரை சாலைகளிலும், கோயில்களிலும் உறவுகள் விட்டுச் செல்கின்றன. இவர்களை யாராவது சீண்டும்போது அவர்கள் மற்றவர்களை தாக்கத் தொடங்குகின்றனர்.
அவர்களுக்கான உரிமைகளும், சிகிச்சை களும் மறுக்கப்படுவதால் சமூகத்தில் அவர்கள் அபாயகரமானவர்களாகவும், தீண்டத் தகாதவர் களாகவும் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
வெளிப்படையாக அறிகுறிகள் தென்படுகிற வர்கள் (மனசிதைவு, இருதுருவ மனநோய்) அல்லது அறிகுறிகள் தென்படாதவர்கள் என மனநோயாளிகள் இரண்டு வகை. குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறைபாடு, ஆட்டிசம் பாதிப்பும் முதியோர்களுக்கு ஞாபகமறதி ஆகியவற்றை குறிப்பிடலாம். மன நோய், அவர்கள் சார்ந்த ஒட்டுமொத்த குடும்பத்தின் வாழ்க்கை தரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு வீரியம் மிக்கவை. ஆனாலும் மற்ற நோய்களைப்போலவே இந்நோய்க்கும் தீர்வு உண்டு.
மன நோய் குறித்து மனநலத்துறை மருத்துவ நிபுணர்கள் கூறுவதாவது: மனச் சிதைவு நோய், மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேரை பாதிக்கிறது. இரு துருவ மன நோய் 3 முதல் 5 சதவீதம் பேரையும், மன அழுத்த நோய் 15 சதவீதம் பேர் வரையும், மனப்பதற்ற நோய் 5 பேரில் ஒருவரையும் பாதிக்கிறது. 120 கோடி மக்கள் தொகை இருக்கிற நமது நாட்டில் 5 ஆயிரத்துக்கும் குறைவான அளவே பதிவு பெற்ற மனநல மருத்துவர்கள் உள்ளனர். மன நோயாளிகள் சிகிச்சைக்கு ஒதுக்கப்பட்ட படுக்கைகள் 25 ஆயிரம் மட்டுமே. வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில் இந்த விகிதாச் சாரம் 30 மடங்கு குறைவானது. ஒரு லட்சம் மக்களுக்கு ஒரு மனநல மருத்துவர் இருந்தால் மட்டுமே குறைந்தப்பட்சம் தரமான சிகிச்சை அளிக்க முடியும்.
பற்றாக்குறை
உள் நோயாளிகள் தங்கி சிகிச்சைப் பெறக்கூடிய மனநலக் காப்பகம், சென்னையில் கீழ்ப்பாக்கத்தில் மட்டுமே உள்ளது. எல்லா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் மன நலத்துறைகள் செயல்பட்டாலும், 10 முதல் 20 படுக்கை வசதிகள் மட்டுமே உள்ளன. இத்துறையில் மன நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், பராமரிக்கவும் உள் கட்டமைப்பு வசதிகள், மருத்துவர்கள் எண்ணிக்கை, சைக்கால ஜிஸ்ட்கள், மன நல சமூக பணியாளர்கள் மிக குறைவாகவே உள்ளனர். அதிலும் மன நல சமூக பணியாளர்கள் பணியிடம் பெரும்பாலான மருத்துவமனைகளில் காலியாகவே உள்ளன.
தனியார் மருத்துவமனைகளை ஒப்பிடுகை யில் மிக சொற்பமான அளவிலேயே அரசு மருத்துவ மனைகளுக்கு நவீன மருந்துகள் கிடைக்கின்றன. அதுவும் அடிக்கடி தட்டுப்பாடு ஏற்படுவதால், நோயாளிகள் மேலும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதனை பயன்படுத்திக்கொள்ளும் தனியார் காப்பகங்கள் மனநோயாளிகளை பராமரிக்க கூடுதல் பணத்தை வசூலிக்கின்றனர்.
புறக்கணிப்பு
மன நோயாளிகளுக்கு பல நேரங்களில் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகின்றன. 1987, 1997-களில் ஏற்படுத்தப்பட்ட மனநலச்சட்டத் தின்படி மன நோயாளிகளுக்கு சம உரிமை, சம பங்கு வழங்கப்பட வேண்டும், இவர்களிடம் வேறுபாடு காட்டக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இவர்களுக்கு சிகிச்சைக்கு பெறும் அடிப்படை உரிமை கூட மறுக்கப்படுகிறது. மன நலத்தை பற்றிய புதிய கொள்கை, திட்டங்கள், உத்தரவுகள் பற்றி இந்திய மன நல மருத்துவர் சங்கத்தில் கலந்து ஆலோசிப்பதே இல்லை. உயரதிகாரிகளையும், நீதிபதிகளையும் கொண்டே மன நல கொள்கைகள் உருவாக்கப்படுகிறது.
மன நலத்தை பற்றி இதுவரை எந்த கட்சி தேர்தல் அறிக்கையிலும் முக்கியத்துவம் தரப்படுவதில்லை. பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்குவதில்லை. அடிமட்ட நிலையிலே குறைகளை களைந்து விழிப்புணர்வு, சட்டசீர்திருத்தம், நிதி ஒதுக்கீடு அரசு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு மன நலத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
தனித்திறமை உண்டு
மாநில மனநலத் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சி.ராமசுப்பிரமணியன் கூறியதாவது: எல்லா மன நோய்களும் குணப்படுத்தக் கூடியது. தீர்க்கக்கூடியது. ஒரளவு தடுக்கக்கூடியது. எப்போது என்றால், எவ்வளவு விரைவாக கண்டுபிடிக்க முடியகிறதோ எவ்வளவு விரைவாக சிகிச்சை அளிக்கப்படுகிறதோ, மறுவாழ்வு பயிற்சி அளிக்கப்படுகிறதோ, அவ்வளவு விரைவாக குணப்படுத்த முடியும். மருத்துவ செலவு மிக அதிகமாக இருக்கிறது. சிகிச்சை பெறச் செல்லும் தூரம் அதிகம், பொருளாதாரச் சிக்கல் போன்ற காரணங்களால் மத்திய தர குடும்பத்தில் கூட சிகிச்சை அளிக்காமல் விட்டுவிடுகின்றனர்.
மூடநம்பிக்கையால் நேரத்தையும், பொருளை யும் செலவழித்து வியாதி முற்றிய நிலையிலே மருத்துவரிடம் வருகின்றனர். மூளையில் சில ரசாயணம் (நியூரோ டிரான்ஸ்மிட்டார்) குறையும் போதோ, அல்லது கூடும்போதோ மனிதனுக்கு மன நோய் ஏற்படுகிறது. சில பேருக்கு பரம்பரை வியாதியாகவும் வரலாம். அதற்கான காரணம் உறுதி செய்யப்படவில்லை. எவ்வளவு மோசமான மன நோயாளிக்கும் ஒரு தனி திறமை இருக்கும். அந்த திறமையை கண்டுபிடித்து ஊக்கப்படுத்தினால் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கும், குணப்படுத்தவும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தீர்வுக்கு என்ன வழி?
மதுரை சமூக செயற்பாட்டாளர் ஆனந்தராஜ் கூறும்போது, ’’ஆட்கொல்லி நோய்களுக்கு செய்யப்பட வேண்டிய விழிப்புணர்வு, மனநல நோய்க்கும் செய்ய வேண்டும். பட்ஜெட்டில் மனநல மருத்துவர், சமூக பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். அனைத்து மருந்துகளும் மருத்துவமனைகளில் கிடைக்கும்படி நிதி ஒதுக்க வேண்டும். மன நலநோயாளிகளை வைத்து பராமரிக்கும் பெற்றோரிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், நான் இறந்துவிட்டால் இந்த பிள்ளைகளை யார் பார்ப்பது என்ற கேள்வியும், கவலையும் அவர்களை தினம் தினம் வாட்டி வதைப்பது தெரிய வந்துள்ளது. அதனால், மன நோயாளிகளுக்கான மறுவாழ்வு பொறுப்பை அரசு ஏற்க வேண்டும்’ என்றார்.
மனநல சட்டங்கள் என்ன சொல்கின்றன?
மன நல சிகிச்சையை மேம்படுத்தும் நோக்கத்தில் 1987-ம் ஆண்டு தேசிய மன மனநலசட்டம் இயற்றப்பட்டது. 2001 ஆகஸ்ட் 6-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்ட 26 மன நோயாளிகள் தீக்கிரையான சம்பவத்துக்குப் பின்னரே அவசரம் அவசரமாக, இந்த சட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. மன நோய்க்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் விதம், மன நோயால் பாதிக்கப்பட்ட பின்பும், சிகிச்சைக்கு பின்பும், அவர்களுக்கு ஏற்படுத்தப்படக்கூடிய மறுவாழ்வு பற்றி தெளிவாக சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. மாற்றுத்திறனாளி பாதுகாப்பு சட்டம் (1995) கூற்றின்படி தீவிர மன நோயால் பாதிக்கப்பட்டவர்களும் மாற்றுத்திறனாளிகளாக வரையறுக்கப்பட்டுள்ளனர். ஆனால் சட்டத்தில் எந்த மனநோயாளிகளுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்ற தெளிவான வழிகாட்டுதல் இல்லை. இதனால், மாற்றுத்திறனாளிகளுக்கான பயணச்சலுகை, உதவித்தொகை போன்றவை தீவிர மனநோயாளிகளுக்கும் மறுக்கப்படுகிறது.
காப்பீட்டு திட்டத்தில் இல்லை
படிப்பு சுமையால் மாணவர்கள், வேலைப்பளுவால் இளைஞர்கள், குடும்ப பிரச்சினைகளில் கணவன், மனைவி மன அழுத்தால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. ஆனால், ஒரு மருத்துவமனை தரம் உயர்த்தினால் அங்கு எல்லா வார்டுகளும் இருக்கும். மன நல வார்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திலும் தனியார் காப்பீட்டுத் திட்டத்திலும் மன நோய்கள் சேர்க்கப்படவில்லை.