தமிழகம்

பி.வி.சிந்து, சாக்‌ஷிக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

செய்திப்பிரிவு

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாக்‌ஷிக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில், ''ரியோடி ஜெனிரோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள பி.வி.சிந்து, சாக்ஷி மாலிக் ஆகியோருக்கு தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசு சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கமும், மல்யுத்தத்தில் சாக்‌ஷி மாலிக் வெண்கலப் பதக்கமும் வென்று இருவரும்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

கடின உழைப்பும், அர்ப்பணிப்பு திறனும்தான் இருவரையும் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கும், தடகள வீரர்களுக்கும் இருவரும் மிகப்பெரிய உத்வேகம் அளித்துள்ளனர்.

குறிப்பாக பெண்கள் மனதுவைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதையும் நிரூபித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள இளம் பெண்களுக்கு இருவரும் முன் உதாரணமாகத் திகழ்கின்றனர். பி.வி.சிந்து, சாக்ஷி மாலிக் ஆகியோரின் பெற்றோர், அவர்களது பயிற்சியாளர்கள், இருவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT