பள்ளிக்கல்வித் துறையில் செயல் படும் அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பொது இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
கடந்த சனிக்கிழமை அன்று அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் காலி யாகவுள்ள பணியிடங்களுக்கு மாவட்டத்துக்குள் மாறுதல் கலந்தாய்வு ஆன்லைனில் நடை பெற்றது. இந்த கலந்தாய்வுக்கு 3,882 முதுகலை ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர் களில் 1,277 பேருக்கு இட மாறுதல் ஆணை வழங்கப்பட்டதாக பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இதேபோல், நேற்று நடந்த மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுவதற்கான கலந்தாய்வில் 625 முதுகலை ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான பள்ளியை தேர்வுசெய்து ஆணை பெற்றனர். இரு நாட்களிலும் சேர்த்து மொத்தம் 1902 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக நடத்தியதற்காக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதாவுக்கும், பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பனுக்கும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் வே.மணிவாசகன் பாராட்டுத் தெரிவித்தார்.