தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் படர்ந்து விரிந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் மாவோயிஸ்ட் நக்ஸல்கள் ஆயுதங்களுடன் பதுங்கி கிராமங்களுக்குச் சென்று உணவுப் பொருட்களை வாங்கிச் சென்றுள்ளனர். தீவிரவாதிகள் தமிழகத்துக்குள் நுழையாமல் தடுக்க தமிழக அதிரடிப்படை வீரர்கள் ஐந்து குழுவாக பிரிந்து எல்லையில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் 20,000 சதுர கி.மீ., பரப்பளவில் மேற்குத் தொடர்ச்சி மலை படர்ந்து விரிந்து உள்ளது. இங்கு சந்தனக் கடத்தல் வீரப்பன், கூட்டாளிகள் கடந்த 2004-ம் ஆண்டு வரை கோலோட்சி வந்தனர். மூன்று மாநில அரசுக்கும் சவாலாக விளங்கிய வீரப்பனை, கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி தமிழக அதிரடிப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
இதையடுத்து 3 மாநில கூட்டு அதிரடிப் படையினர், அந்தந்த மாநில அடர்ந்த வனப்பகுதிகளைக் கண்காணிக்கும் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கேரளத்தில் வன கண்காணிப்பு, நக்ஸலைட் தடுப்பு நடவடிக்கையில் தொண்டர் அதிரடிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தமிழக அதிரடிப்படை வீரர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சமீபகாலமாக கேரள எல்லை யில் உள்ள மலைத்தொடரில் மாவோயிஸ்ட் நக்ஸலைட்டுகள் ஊடுருவல் அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் மாவோயிஸ்ட்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நடமாடி வருகின்றனர். வயநாடு, வேப்பாடி, வழிகாட்டி, நிலம்பூர், பெருங்கோம் ஆகிய கிராமங்களில் நக்ஸலைட் நடமாட்டம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் தங்களை மக்களுக்கான போராட்டக்குழு என்றும், மக்களின் உரிமைகளை காக்கும் இயக்கமாக மாவோயிஸ்ட் உள்ளதாக துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.
மேலும், பொதுமக்களிடம் உணவுக்குத் தேவையான அரிசி, கோதுமை, சர்க்கரை, மளிகை, எண்ணெய்ப் பொருட்களை வாங்கிச் சென்றுள்ளனர். இது போல கேரள மாநிலத்தில் எட்டு முறைக்கும் மேலாக மாவோயிஸ்ட் மக்களிடையே பிரச்சாரம் செய்ததாகத் தெரிகிறது. இதில் பெண்களும் இருந்துள்ளனர். இந்த சம்பவத்தால் கேரளம் மட்டுமின்றி தமிழகம், கர்நாடக மாநில அரசுகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன. மாவோயிஸ்ட் நடமாட்டம், உணவுப் பொருட்கள் வாங்கிச் சென்றது குறித்து கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த செப்டம்பர் 14-ம் தேதி வயநாடு மாவட்டம் மேம்பாடி கிராமத்துக்குள் நக்ஸ லைட்டுகள் வந்து சென்றதாக கேரள போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.
இதனால் தீவிரவாதிகள் தமிழக எல்லைக்குள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதால் தமிழக உயர் போலீஸ் அதி காரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழக அதிரடிப்படை வீரர்கள் ஐந்து பிரிவாக பிரிந்து, கேரள-தமிழக எல்லையில் உள்ள சோழாடி, பந்தலூர், கரரம்பாடி, பாட்டவயல், தொரப்பள்ளி, நாடுகாணி ஆகிய கிராமங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தீவிரவாதிகள் நடமாட்டம் இருந்தால், உடனடியாகத் தகவல் தெரிவிக்கும்படி கிராம மக்களிடம் அறிவுறுத்தி வருகின்றனர். இதுபோல 3 மாநிலங்களின் எல்லைப் பகுதியான ‘ட்ரை ஜங்ஷன்’ முத்தங்கா பகுதியில் அதிரடிப்படை வீரர்கள் முகாமிட்டு உள்ளனர்.
முதுமலை, பந்திப்பூர், வயநாடு பகுதி வழியாக நக்ஸ லைட்டுகள் மாநிலம் விட்டு மாநிலம் இடப்பெயர்ச்சி செய்யாமல் தடுக்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.