திருப்பூர் மாவட்டம் உடுமலை தென்கிழக்கு எல்லையில் அமைந்திருக்கிறது அமராவதி வனப்பகுதி. வனவிலங்குகள் நடமாட்டதைப் பற்றி அறிய இங்கு வைக்கப்பட்டிருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் நாட்டுத் துப்பாக்கியோடு உலாவும் ஒருவரும், அவருக்கு முன்னே சாக்குப்பையுடன் நடக்கும் ஒருவரும், வேறு சிலரும் பதிவாகியிருந்தனர்.
வனத்துக்குள் சுற்றித்திரியும் இந்த நபர்கள், சந்தனக்கட்டை கடத்தும் கும்பலோ, மான்வேட்டை அல்லது வனவிலங்குகள் வேட்டை நடத்தும் கும்பலா அல்லது நக்சல், தமிழ் தீவிரவாதிகள், மாவோயிஸ்ட் போன்ற தீவிரவாத அமைப்புகளை சார்ந்தவர்களா என்று சந்தேகம் தெரிவித்து தேடுதல் வேட்டையைத் துரிதமாக்கியுள்ளனர். இருபதுக்கும் மேற்பட்ட வனத்துறையினர் களத்தில் இறங்கி, இங்குள்ள ஆதிவாசிகள் கிராமங்களில் இந்த மர்மநபர்களின் புகைப்படங்களைக் காட்டி விசாரித்து வருகின்றனர். இவர்களைப் பற்றி துப்பு கொடுக்கிறவர்களுக்கு தக்க சன்மானம் தரப்படும் என்றும் அறிவித்துள்ளனர். தொடர்ந்து யாரும் அகப்படாவிட்டால் அதிரடிப்படை மூலம் தேடுதல் நடத்தவும் திட்டம் செய்துள்ளனர் அதிகாரிகள்.
இப்படியிருக்க இங்குள்ள ஆதிவாசி மக்களிடம் இந்த விவகாரம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. இப்படி மர்ம நபர்கள் நடமாட்டம் காடுகளுக்குள் இருப்பதும், அவர்கள் இங்குள்ள சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவதும், வனவிலங்கு வேட்டைகளில் ஈடுபடுவதும் இன்று நேற்றல்ல; காடுகள் எப்போது உருவானதோ அப்போதிருந்தே இருக்கிறது. அது இங்குள்ள வன அதிகாரிகளுக்கு தெரியாததும் அல்ல!’ என்கின்றனர் அவர்கள்.
சந்தன மரங்களுக்கு கிராக்கி
கேரளப் பகுதிகளில் சந்தன எண்ணெய் மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிக்கும் சிறுதொழிற்கூடங்கள் அதிகம் உள்ளன. கேரளத்தில் சந்தன மரம் வளர்க்கவும், விற்பனை செய்யவும் தமிழகம் போல் கடுமையான கட்டுப்பாடுகள் இல்லை. எனவே இங்குள்ள சந்தன மரங்களை வெட்டி கேரளத்துக்கு கொண்டுபோய் கொழுத்த காசு பார்க்கும் கும்பல் கேரளத்தின் மறையூர், மூணாறு பகுதிகளில் மிக அதிகம். சில சந்தன மாஃபியாக்கள் இங்குள்ள வனத்துறையினரையே கைக்குள் போட்டு இந்த செயலை செய்வதும் உண்டு. இவர்களுக்கு இங்குள்ள ஆதிவாசி மக்களும் பணத்துக்காக உதவுவது நிறைய நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வனச் சரணாலயம் புலிகள் காப்பகமாக மாறிய பின்பு வனப்பாதுகாப்பு என்பது கடுமையாக்கப்பட்டது. இதை உத்தேசித்து இங்குள்ள மலைவாசிகளை வெளியேற்றவும் வனத்துறை முயற்சித்தது. ஆனால் ஆதிவாசிகளின் கடுமையான எதிர்ப்பு போராட்டத்தால் அது தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் இரண்டாண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் தென்னை மட்டைகள் ஏற்றிய சரக்கு டெம்போ ஒன்றை வனத்துறையினர் மடக்கி நிறுத்தி சோதனையிட அதிலிருந்த டிரைவர் உள்ளிட்ட ஆறு பேரும் எட்டிக் குதித்து தப்பி ஓடிவிட டெம்போவில் இருந்த தென்னை மட்டைகளை களைத்து பார்த்தால் 620 கிலோ சந்தனக்கட்டைகள் பிடிபட்டிருக்கின்றன. அந்த டெம்போ எங்கிருந்து வந்தது என்பதை பற்றி புலனாய்வில் அதிகாரிகள் இறங்க அது திருமூர்த்தி மலைக்கு அப்பால் காடுகளோடு காடுகளாக வீற்றிருக்கும் குழிப்பட்டி, மாவடப்பு, குருமலை பகுதிகளில் கட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்தது தெரிய வந்திருக்கிறது.
அதில் கூடுதல் அதிர்ச்சி. இந்த இடத்தில் 600க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்பட்டதைக் கண்டுபிடித்துள்ளனர். அங்கு சந்தனமரங்களி்ன் இலைகளும் சிம்பும், சிமிறுகளுமே கிடக்க, புலிகள் காப்பகத்தின் தலைமை வனப் பாதுகாவலர் தியாகியே ஸ்பாட் விசாரணைக்கு வந்துவிட்டார். இதைத் தொடர்ந்து இங்கே கிடந்த சந்தன மர சிம்பு, சிமிறுகளை வெட்டி அடுக்கி குடோனுக்கு கொண்டு போய் எடை போட்டுள்ளனர். அதுமட்டும் 12.5 டன் எடை இருந்துள்ளது. கடத்தல்காரர்கள் வெட்டிப் போட்ட சிம்பும் சிமிறுமே இந்த அளவு என்றால் விளைஞ்ச மரம் எத்தனை டன் இருந்திருக்கும்? ஒரு கிலோ சந்தனக்கட்டை ரூ 2,000 விலை போகிறது. அப்படியென்றால் வெட்டப்பட்டு கடத்தப்பட்ட சந்தன மரங்கள் எத்தனை கோடிகள் இருக்கும் என்று வனத்துறை அதிகாரிகளே வாய் பிளந்தனர்.
மலைக்காடுகளில் சோதனை
இது சந்தன வீரப்பனை விட மாபெரும் சந்தனக்கொள்ளையர்கள் செய்த வேலை என்று கருதி அதிரடிப்படை ஐ.ஜி சைலேந்திரபாபு தலைமையில் ஒரு குழு, இந்த மலைக்காடுளை நான்கு நாட்களுக்குமேல் ஊடுருவி சோதனை செய்தது.
இந்த விவகாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிவாசிகள் விசாரிக்கப்பட்டார்கள். சிலர் கைதும் செய்யப்பட்டார்கள். ஆனால் அசல் சந்தன மாஃபியாக்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.
ஆனால் ஓராண்டு கழித்து கோவை ஆனைகட்டி அட்டப்பாடி மலைக்காடுகளில் இதே மாதிரி புது பரபரப்பு தொற்றிக் கொண்டது. இங்கு கேரளப் பகுதியில் அமைந்துள்ள மல்லீஸ்வரன் மலை அடிவாரத்தில் கக்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த வைத்தியர் மணி என்பவர் காடுகளுக்குள் கல்வாழை மூலிகை பறிக்கச் சென்றிருக்கிறார். அங்கு இருபது பேர் கொண்ட கும்பல் ஒன்று நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் கத்தி, ஈட்டி போன்ற ஆயுதங்களுடன் எதிர்ப்பட்டிருக்கிறது. அவர்களை அந்த ஏரியாவில் மணி கண்டதேயில்லை என்பதால் அவர்களைப் பற்றி அவர்களிடமே விசாரித்திருக்கிறார் வைத்தியர். அவர்களோ துப்பாக்கியைக் காட்டி ஓடிப்போ என்கிற பாணியில் மிரட்ட, மணி ஓட்டமாக ஓடி வந்து ஊருக்குள் வந்து அகழி போலீஸ் நிலையத்தில் விஷயத்தை சொல்லியிருக்கிறார்.
உடனே வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துவிட்டு வனாந்திரத்துக்குள் தேடுதல் வேட்டை நடத்தியிருக்கிறார்கள் டிஒய்எஸ்பி மனோஜ்குமார் தலைமையி லான போலீஸார்.
இப்போது கேரளத்தில் இடது சாரிகளுக்குள் எதிரெதிர் கருத்து மோதல்கள் வெடித்துள்ளன. அதில் கோஷ்டிகளும் உருவாகி விட்டன. அதில் ஒரு பிரிவு மேற்கு வங்கத்தின் மாவோயிஸ்ட்டுகள் அனுதாபிகளாக மாறி வருகிறார்கள். அவர்கள் வடமாநிலங்க ளுக்குச் சென்று முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்களைச் சந்தித்து வருகிறார்கள். அங்கு வகுப்பெடுக்கும் சிலர் இங்கும் வந்து தங்கள் அனுதாபிகளை கண்டு பேசி ரகசியக் கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அதற்கு உகந்த இடமாக அட்டப்பாடி காடுகளைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படி வந்தவர்களில் ஒருசிலர்தான் இப்போது வந்தவர்களாக இருக்கும்!’ என்பதுதான் அது.
இதையடுத்து மேலும் உஷாரான கேரள போலீசார் தமிழக போலீசாருக்கும் தகவல் கொடுத்து இரு மாநில அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் போட்டிருக்கிறார்கள். தேடுதல் வேட்டையும் நடத்திப் பார்த்தனர். யாரும் அகப்படவில்லை. அதைத் தொடர்ந்து வால்பாறை மலைக் காடுகளில் இதுபோலவே மர்ம நபர்கள் சுற்றித் திரிவதாகவும், அவர்கள் பாலியல் படங்கள் எடுப்பதாகவும் தகவல்கள் வர அங்கும் போலீசார் சில மாதங்களுக்கு முன்பு தேடுதல் வேட்டை நடத்தினர். வழக்கம்போல் யாரும் பிடிபடவில்லை. அதற்கு பிறகு இப்போதுதான் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் நான்கு மர்ம நபர்கள் பதிவாகியுள்ளனர். அவர்கள் வனவிலங்கு வேட்டை, சந்தனக் கடத்தல்காரர்கள் என்றால் தப்பில்லை. மாவோயிஸ்ட்டுகளாகவோ, நக்ஸலைட்டுகளாகவோ இருந்தால் அது சிக்கலான விஷயம். எனவே இந்தத் தேடுதலை மேலும் தீவிரப்படுத்த அதிரடிப் படையினரை வரவழைக்க உத்தேசித்துள்ளனர் உயர் அதிகாரிகள்.