டாஸ்மாக் முறைகேடுகள் குறித்து விசாரிக்க, தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைக்கும் என்று நம்புவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கேள்வி பதில் வடிவில் அவர் வெளியிட்ட அறிக்கை:
அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த நாடாளுமன்றக் கூட்டுக் குழு அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று பா.ஜ.க. முன்னணித் தலைவர் யஷ்வந்த் சின்ஹா, மக்களவைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். 'ஜே.பி.சி. தலைவர் பி.சி.சாக்கோ அளித்துள்ள அறிக்கையில் எதிர்க்கட்சிகளின் கருத்துகள் திருத்தி எழுதப்பட்டிருக்கலாம் அல்லது நீக்கப்பட்டிருக்கலாம் என நாங்கள் நினைத்தது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதன் மூலம் ஜே.பி.சி. தலைவர் சாக்கோ அனைத்து விதிகளையும் மீறியிருக்கிறார்' என்று யஷ்வந்த் சின்ஹா கண்டனம் தெரிவித்துள்ளார்.
பயிர்க் காப்பீடு
இந்த ஆண்டு நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை வேளாண் துறை மேற்கொள்ளவில்லையாம். தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி விரக்தியில் இருக்கும் விவசாயிகளை ஊக்கப்படுத்தி, பயிர்க் காப்பீடு செய்வதற்கான நடவடிக்கைகளை இனியாவது வேளாண் துறையினர் எடுக்க வேண்டும்.
மதுரை மண்டலத்தில் மட்டும் டாஸ்மாக் அதிகாரிகளால் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. மற்ற மண்டலங்களில் நடக்கும் முறைகேடுகளால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று சொல்கிறார்கள். இது தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டிருக்கிறது. தோழமைக் கட்சியே கேட்டிருக்கிறது என்ற அடிப்படையிலாவது ஆட்சியினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவோம்.
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் சினிமா படப்பிடிப்பு நடத்தினால் நாளொன்றுக்கு ரூ.1 லட்சம் வாடகை செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். இவர்கள்தான் விளையாட்டுத் துறையையும், திரைத் துறையையும் வளர்க்கிறார்களாம். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.