தமிழக அரசு நேற்று வெளி யிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
அகமதாபாத்தில் உள்ள இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் நடத்தப்படும் ஓராண்டு கால தொழில் முனைவு மற்றும் வர்த்தக மேலாண்மை பட்டயப் படிப்புக்கு சென்னை கிண்டியில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் தொடர்பு மையமாக செயல்படத் தொடங்கியுள்ளது. ஆங்கில வழியில் நடத்தப்படும் இப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் என 4 கட்டங்களில் நடைபெறும். இதில், பட்டப் படிப்பு அல்லது பட்டயப் படிப்பு முடித்து வேலையில் உள்ளவர்கள் அல்லது தொழில் செய்பவர்கள் சேரலாம். இப்படிப்பில், ஒரு தொழிலை எவ்வாறு ஆரம்பிக்க வேண்டும், எப்படி நடத்த வேண்டும் என்பது கற்றுக் கொடுக்கப்படும். மேலும், தொழிலை விரிவுபடுத்த உதவும் தொழில் திட்டங்கள், சந்தை ஆய்வு, தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். இந்த பட்டயப் படிப்பில் மொத்தம் 3 நிலைகள் உள்ளன. முதல் 2 நிலைகளில் தேர்வுகள் அப்ஜெக்டிவ் முறையிலும் 3-வது நிலையில் தேர்வு விரிவான விடையளிக்கும் வகையிலும் அமைந்திருக்கும்.
படிப்புக் கட்டணம் ரூ.12,500. இந்த பட்டயப் படிப்பானது பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) ஒப்புதல் பெற்றது ஆகும். கூடுதல் விவரங்கள் அறிய 044-22252081 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.