தமிழகம்

மவுலிவாக்கத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த 11 மாடி கட்டிடம் இடிக்கும் பணி தள்ளிவைப்பு: பின்னர் அறிவிப்பு வெளியாகும் என தகவல்

செய்திப்பிரிவு

இன்று இடிக்கப்படுவதாக இருந்த மவுலிவாக்கம் 11 அடுக்குமாடி கட்டிடப் பணி திடீர் என்று நிறுத்தப் பட்டுள்ளது.

போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில் 11 மாடிகள் கொண்ட 2 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வந்தன. இதில் ஒரு 11 மாடி கட்டிடம் 2014-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி இடிந்து விழுந்ததில் 61 தொழிலாளர்கள் பலியானார்கள். 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

மற்றொரு 11 மாடி கட்டடத்தை ஆய்வு செய்தபோது அதுவும் உறுதியாக இல்லை என்பது தெரிய வந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அந்த கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழக அரசு மற்றும் சிஎம்டிஏ அதிகாரிகள் இடிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கினர். கட்டிடத்தில் இருந்து பொருட்களை அகற்றிவிட்டு தூண்களில் வெடிமருந்தை வைக்க துளைகள் போடப்பட்டன. இந்தப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து கட்டிடத்தை சுற்றி 100 மீட்டர் தொலைவில் உள்ள வீடுகளில் ஏற்பட்ட விரிசல்களையும் பார்வையிட்டு கணக்கெடுத்து வீடியோ மற்றும் போட்டோ பதிவும் செய்தனர்.

இதையடுத்து ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்தபின், 25-ம் தேதி (இன்று) கட்டிடத்தை இடிக்க நாள் குறிக்கப்பட்டது. கட்டிடம் இடிக்கும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகளை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். மேலும் வாகனங்கள் நிறுத்தும் இடங் களையும், வாகனங்கள் செல்லும் வழிகளையும் ஏற்பாடு செய்து வந்தனர்.

இதையடுத்து கட்டிடத்தை வெடி வைத்து தகர்க்க தூண்களில் வெடி மருந்துகள் நிரப்ப நேற்று காலை 2 மினி வேன்களில் வெடிமருந்துகள் கொண்டு வரப்பட்டன.

கட்டிடத்தைச் சுற்றிலும் 100 மீட்டர் தொலைவில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேற ஏற்கெனவே உத்தரவிடப்பட்டு இருந்தது. அவர்கள் மவுலிவாக்கம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் தங்க வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் துளை இடப்பட்ட தூண்களில் வெடி மருந்துகளை நிரப்ப வேண்டாம் என்றும் கட்டிடம் இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 2 வாகனங்களில் கொண்டு வரப்பட்ட வெடி மருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் திருப்பி கொண்டு செல்லப்பட்டது.

மேலும் கட்டிடம் எப்போது இடிக்கப்படும் என்ற தேதி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டிடம் இடிக்கும் பணியை திடீரென தள்ளிவைக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

SCROLL FOR NEXT