மதிப்பெண் அடிப்படையில் இனி ரேங்க் பட்டியல் வெளியிடப்படமாட்டாது என்ற தமிழக அரசின் புதிய அறிவிப்பால் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளில் பரபரப்பாக இருக்கும் பள்ளிகள் நேற்று வெறிச்சோடிக் காணப்பட்டன.
எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளில் ஆண்டுதோறும் பள்ளிக்கூடங்கள் மிக பரபரப்பாக இருக்கும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், பள்ளி வளாகங்களில் காலை முதலே மாணவர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும்.
மாநில, மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்கள், பாடவாரியாக மதிப்பெண் பெற்றவர்கள் என மாணவர்கள் பலர் கல்வி அலுவலர், ஆட்சியரை சந்திக்க வருவார்கள். பெற்றோரும், ஆசிரியர்களும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை தெரிவிப்பார்கள்.
ரேங்க் பெற்ற மாணவர் தங்களுக்கும், தங்கள் பள்ளிக்கும் பெருமை தேடிக் கொடுத்ததாகக் கூறி சக பள்ளி மாணவர்களும் அவர்களை தூக்கி வைத்து கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும் அந்தந்த பள்ளிகளில் பாராட்டும், வரவேற்பும் கொடுக்கப்படும்.
ஆனால், இனி மதிப்பெண்கள் அடிப்படையில் ரேங்க் பட்டியல் வெளியிடப்படமாட்டாது என தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் வெளியான சில விநாடிகளில் மாணவர்கள் தங்கள் பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்தால் உடனடியாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் எனவும் அறிவித்திருந்தது. பள்ளிகளில் காலை 10 மணி அளவில் மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் ஒட்டப்பட்டது.
ரேங்க் முறை இல்லாததால் வழக்கமாக மாணவர்கள் கூடும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் நேற்று கூட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. பள்ளிகளுக்கும் பெரும்பாலான மாணவர்கள் செல்லவில்லை. ஒரு சில மாணவர்கள் மட்டுமே பிற மாணவர்களின் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளவும், பள்ளி ஆசிரியர்களை சந்திப்பதற்காகவும் பள்ளிகளுக்கு சென்றனர்.
இதனால் வழக்கமாகத் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் காலை முதலே பரபரப்புடன் காணப்படும் முதன்மைக் கல்வி அலுவலகம், அரசு, தனியார் பள்ளிகள் நேற்று வெறிச்சோடிக் காணப்பட்டன.