தமிழகம்

குறைந்த மின் அழுத்தத்தால் வேங்கடமங்கலம் மக்கள் அவதி

செய்திப்பிரிவு

வண்டலூர் மாம்பாக்கம் துணை மின்நிலையத்தில் இருந்து வேங்கடமங்கலம், மதுரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. பல இடங்களில் இரவு நேரங்களில் குறைந்த மின் அழுத்தப் பிரச்னை இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். பகலில் கொளுத்தும் கடும் வெயிலில் இருந்து தப்பி இரவு தூங்கச் செல்லும்போது குறைந்த மின்அழுத்த பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் ஏசி, மின்விசிறி, ஃபிரிஜ் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்கள் சரியாக இயங்குவதில்லை. எனவே இந்த குறைபாட்டை போக்க புதிய மின்மாற்றி அமைத்து தர உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் கூறும்போது, ‘‘எங்கள் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. வேங்கடமங்கலம் ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள மின்மாற்றி பயன்படுத்தும் பகுதியில் மின் அழுத்தம் குறைபாடு ஏற்படுகிறது. இங்கு 100 கேவிஏ திறன் கொண்ட மின்மாற்றி உள்ளது. இதில் 400-க்கும் மேற்பட்ட இணைப்புகள் உள்ளன. இதனால் மின் அழுத்தம் குறைபாடு உள்ளது. தற்போது கோடை வெயில் காரணமாக குறைந்த அழுத்தம் அதிகரித்துள்ளது. போதிய மின்மாற்றிகள் இல்லாததுதான் மின் அழுத்த குறைபாட்டிற்கு காரணம்’’ என்றார்.

இது குறித்து மாம்பாக்கம் மின்வாரிய உதவி பொறியாளர் கிருபாகரன் கூறும்போது, ‘‘குறைந்த மின் அழுத்தம் இருப்பது உண்மைதான். இது தொடர்பாக புதிய மின்மாற்றி அமைக்க கோட்ட பொறியாளர் அலுவலகத்துக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அனுமதி கொடுத்து, புதிய மின்மாற்றி வழங்கினால்தான் இந்த பிரச்னைக்கு தீர்வு காணமுடியும்’’ என்றார்.

SCROLL FOR NEXT