ஜல்லிக்கட்டு காளைகளை அடிமாடுகளாக விற்க மனமில்லாததால், அவற்றை தொழு மாடுகளுடன் பராமரித்து வருகின்றனர் வத் தலக்குண்டு பகுதி ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக் குண்டு பகுதியில் அதிக எண்ணிக் கையில் ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்க்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த தடை செய்யப்பட்டதால் காளைகளை ஜல்லிக்கட்டுக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
ஜல்லிக்கட்டுக்கு தடை நீங்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ஆர்வலர்களுக்கு இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது கேள்விக்குறியாகவே இருப்பதால் ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது.
தாங்கள் ஆசையுடன் வளர்த்த ஜல்லிக்கட்டு காளைகள் இனி பயன்படாமல் போய்விடும் என்ற நிலையிலும் இவற்றை அடிமாடு களாக விற்பனை செய்து கேரளாவுக்கு அனுப்ப மனமின்றி, நிலங்களில் உரமிட மாட்டுச் சாணத்தை பெறுவதற்காக வளர்க் கப்படும் தொழு மாடுகளுடன் வளர்த்து வருகின்றனர்.
வத்தலக்குண்டு அருகே ஜி.தும்பலம்பட்டியைச் சேர்ந்த அன்பு கூறியதாவது:
ஜல்லிக்கட்டு எங்கு நடந்தாலும் காளைகளை அழைத்துச் செல் வோம். ஜல்லிக்கட்டு தடை செய் யப்பட்ட நிலையிலும் காளை களை வளர்த்து வருகிறோம். இனப்பெருக்கம் செய்வதற்காக ஜல்லிக்கட்டு காளைகளை வாங்கிச் செல்வர்.
தற்போது இது குறைந்துவிட்டது. இந்த நிலை தொடர்ந்தால் மாடுகள் இனப்பெருக்கத்துக்கு வெளிநாடுகளில் இருந்து காளை மாடுகளை கொண்டுவந்தால்தான் உண்டு.
தோட்டங்களுக்கு தொழு உரமாக மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்தி வருகிறோம். இதற்காக மாடுகள் வளர்க்கப்படுகின்றன. அதனுடன் சேர்த்து ஜல்லிக்கட்டு காளைகளைத் தற்போது வளர்த்து வருகிறோம்.
வீட்டின் செல்லப்பிள்ளையாக இருந்த ஜல்லிக்கட்டு காளைகளை தொழு மாடுகளுடன் விட்டுள்ளது கஷ்டமாகத்தான் உள்ளது.
இதை நினைக்கும்போது கண்ணீர் வருகிறது. அடிமாடாக விற்க மனமில்லாததால் தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகளைப் பராமரித்து வருகிறோம் என்றார்.