புதுக்கோட்டை மாவட்டம் நெடு வாசலில் ஹைட்ரோகார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்குழு அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடு வாசலில் இயற்கை எரிவாயு எடுக்க உள்ளதாக மத்திய அரசு பிப்.15-ம் தேதி அறிவித்தது. இந்த திட்டத்தால் இப்பகுதி பாலைவன மாக மாறுமென மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, பிப்.16-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின் றனர்.
இதற்கிடையே, இந்த திட் டத்தை நெடுவாசலில் செயல் படுத்தமாட்டோம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மார்ச் 1-ம் தேதி அறிவித்திருந்தார். அதன்பிறகு நெடுவாசல் போராட் டம் முடிவுக்கு வரும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக மார்ச் 2-ம் தேதி போராட்டம் முன்பைவிட தீவிரமடைந்தது.
இதைத்தொடர்ந்து, நெடுவாசல் புள்ளான் விடுதி, நல்லாண்டார் கொல்லை, கோட்டைக்காடு ஆகிய பகுதிகளில் போராட்டக் குழுவினருடன் மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், ஆட்சியரின் உறுதிமொழியை ஏற்று கோட்டைக் காடு பகுதி மக்கள் மட்டும் போராட் டத்தை நேற்று முன்தினம் கை விட்டனர். ஆனால், நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை பகுதி மக்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததால், போராட்டம் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து, நெடுவாசல் போராட்டக் குழுவினர் மதுரையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினர். அப்போது, இந்த திட்டத்தை கை விடுவதாக அமைச்சர் உறுதி அளிக்கவில்லை. போராட்டக் குழுவை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிர தானை சந்திக்க ஏற்பாடு செய்வ தாக அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் உறுதி அளித்தார்.
இந்நிலையில் 18-வது நாளாக நேற்று நெடுவாசலில் போராட்டம் தீவிரம் அடைந்தது அப்போது, பேசிய போராட்டக் குழுவைச் சேர்ந்த செந்தில்தாஸ், “மத்திய அரசு இந்த திட்டத்தை ரத்து செய்யும்வரை போராட்டம் தொட ரும்” என அறிவித்தார். இந்த போராட்டத்தை ஆதரித்து திரைப் பட துறையைச் சேர்ந்த கரு.பழனி யப்பன், ஜி.வி.பிரகாஷ் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
11-ம் தேதி பேச்சுவார்த்தை
புதுக்கோட்டை மாவட்டம் நெடு வாசலில் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று சந்தித்துப் பேசியது: இந்த திட்டம் தொடர்பாக மார்ச் 11-ம் தேதி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சருடன், போராட்டக்குழு வினர் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறேன். இந்த திட்டம் குறித்து கொள்கை அளவில் பேச தயாராக இல்லை. இருந்தாலும், இந்தப் பகுதிக்கு இத்திட்டம் தேவையில்லை என நானும் வலியுறுத்துவேன் என்றார்.