புத்தூரில் தீவிரவாதிகளை கைது செய்யும்போது காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குற்றப் புலனாய்வுத்துறை ஆய்வாளர் லட்சுமணனை முதல்வர் ஜெயலலிதா இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்துப் பாராட்டினார். அப்போது, 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கிய அவர், லட்சுமணனின் குடும்பத்திற்கு ஆறுதலும் கூறினார்.
கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளான பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோர், ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தின் போது படுகாயமடைந்த குற்றப்பிரிவு ஆய்வாளர் லட்சுமணன் மீட்கப்பட்டு, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனைக்கு சென்று லட்சுமணனை நேரில் சந்தித்து, நலம் விசாரித்தார். அப்போது, 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கிய முதல்வர், லட்சுமணனின் குடும்பத்திற்கு ஆறுதலும் கூறினார்.
அப்போது லட்சுமணிடம் அவர் பேசும்பொது, “நீங்கள் உயிர் பிழைத்தது கடவுள் செயல். ஏனென்றால் உயிரோடு இருந்து இன்னும் ஆற்ற வேண்டிய கடமைகள் உங்களுக்கு நிறைய இருக்கின்றன. டாக்டரிடம் விசாரித்தேன், மெடிக்கல் ரிப்போர்ட் முழுவதையும் பார்த்தேன், இனிமேல் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. சீக்கிரம் குணமாகிவிடுவீர்கள். இங்கே நன்றாக பார்த்துக் கொள்வார்கள். உங்களுடைய மருத்துவச் செலவு முழுவதையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும். என்ன தேவைப்பட்டாலும் நாங்கள் செய்வோம்.
மற்றபடி உங்களுடைய வீரத்தைப் பாராட்டி மக்களுடைய நன்றியை தெரிவிக்கும் வகையில் 15 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு அறிவித்துள்ளோம். அத்துடன் உங்களுடைய மருத்துவச் செலவு முழுவதும் ஏற்றுக் கொள்கிறோம். அதோடு பதவி உயர்வும் அறிவித்துள்ளோம். அதனால் நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.
மருத்துவர்கள் இங்கே நன்றாக பார்த்துக் கொள்வார்கள். உங்கள் குழந்தைகளைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். அவர்களுடைய எதிர்காலத்திற்கு நாங்கள் உத்தரவாதம். நீங்கள் உயிர் பிழைத்தது நான் சொன்னது போல கடவுள் செயல். மெடிக்கல் ரிப்போர்ட்டை பார்க்கும் போது எப்படி உயிர் பிழைத்தீர்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. ஆனால் உங்களை கடவுள் காப்பாற்றி இருக்கிறார் என்று சொல்லும் போது, நீங்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் இன்னும் நிறைய உள்ளது. நாங்கள் எல்லோரும் உங்களைப் பார்த்து பெருமைப்படுகிறோம். காவல் துறையில் ஒரு வீரன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம். எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக, எடுத்துக்காட்டாக திகழ்கிறீர்கள்” என்றார் முதல்வர் ஜெயலலிதா.