ஈரோடு புத்தகத் திருவிழா வருகிற 5-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பல்வேறு முன்னணி பதிப்பகங்கள் 230 அரங்குகள் அமைக்கவுள்ளன.
இதுகுறித்து மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் 12-வது ஆண்டு புத்தகத் திருவிழா ஈரோடு வ.உ.சி.மைதானத்தில் வருகிற 5-ம் தேதி தொடங்கி வரும் 16-ம் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. இதில் தமிழக அளவிலும், இந்திய அள விலும் புகழ்பெற்ற தமிழ் மற்றும் ஆங்கில புத்தக நிறுவனங்களின் 230 அரங்குகள் இடம்பெறுகின் றன. புத்தகக் கண்காட்சியை நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9:30 மணி வரை இலவசமாக பார்வையிடலாம். அனைத்து நூல்களுக்கும் 10 சதவீத சிறப்புக் கழிவு வழங்கப்படுகிறது.
5-ம் தேதி நடக்கும் தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகிக் கிறார். பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக் கல்லூரி தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் முதல் விற்பனையைத் தொடங்கி வைக் கிறார். உலகத் தமிழர் படைப்பரங் கினை உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறனும், புத்தக அரங்கினை முன்னாள் துணைவேந்தர் பி.கே.பொன்னு சாமியும் தொடங்கி வைக்கின்றனர். ‘பப்பாசி’ தலைவர் காந்தி கண்ணதாசன் வாழ்த்துரை வழங்குகிறார்.
திருவிழாவில் நாள்தோறும் மாலை 6 மணிக்கு சிறப்பு பெற்ற ஆளுமைகள் பங்கேற்கும் சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது. கடந்த ஆண்டு 6 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பங்கேற்றனர். ஏழு கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாயின.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.