தமிழகம்

தமிழக மீனவர்களைக் காக்க விரைவில் போராட்டம்: கருணாநிதி

செய்திப்பிரிவு

இலங்கை கடற்படையிடம் இருந்து தமிழக மீனவர்களை காப்பாற்ற திமுக விரைவில் போராட்டம் மேற்கொள்ளும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "பிரதமர், மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சருடைய வாக்குறுதிகளுக்கு மாறாக, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், அவர்கள் மீது வழக்குகள் தொடர்ந்து இலங்கைச் சிறையிலே அடைக்கப்படுவதும், இலங்கையிலே உள்ள நீதிமன்றங்களில் அவர்கள் குற்றவாளிகளாக நிறுத்தப்படுவதும் நின்றபாடில்லை, தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

தமிழ் மீனவர்களுடைய படகுகளைக் கவர்ந்து சென்றும், அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு உள்ள வழியை அறவே அடைக்கும் விதத்தில் நூற்றுக்கணக்கான மீனவர்களைச் சிறைப்பிடித்து வழக்குகள் தொடர்ந்தும்; அவர்களுடைய விடுதலை என்பது கேள்விக்குறியாக ஆக்கப்படுகிற சூழ்நிலை இலங்கை அரசின் ஆதரவோடு, அங்குள்ள சிங்கள கடற்படையினரால் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிற கொடுமையை இனியும் தமிழ்நாடு தாங்கிக் கொள்ளத் தயாராக இல்லை.

பிரச்சினையின் அவசர அவசியத்தை மனிதாபிமான கண் கொண்டு பார்க்கத் தவறி பழிவாங்கும் நோக்கத்தோடு இலங்கை அரசின் ஆதரவோடு நடைபெறும் இந்தக் கொடுமையை எவ்வளவு நாளைக்குத் தான் தமிழக மக்கள் தாங்கிக் கொள்ள முடியும்?

பிரதமரிடமும், வெளியுறவுத் துறை அமைச்சரிடமும் இந்த உச்சக்கட்டக் கொடுமைகளை நேரடியாக தமிழ்நாட்டு மீனவ மக்களின் பிரதிநிதிகள் டெல்லிக்கே சென்று எடுத்துரைத்தும் கூட, எந்தப் பலனும் இல்லை என்ற நிலையில் இதற்கோர் கடுமையான மாற்று என்ன என்பதைத் தெரிந்து, தெளிந்து தமிழக மீனவர்களைத் திட்டமிட்டே கொடுமைப்படுத்தும் சிங்களவர் அட்டூழியத்தை நேரடியாகச் சந்தித்து முடிவு காண்பதற்குத் தமிழ்நாடு தயாராகி வருகின்றது.

தமிழக மீனவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் களத்தில் நிற்பதற்கும், அவர்களைக் காப்பாற்ற எத்தகைய இடுக்கண்களை ஏற்பதற்கும் நானும், என் தலைமையிலே உள்ள தி.மு.க.வும் தயாராக இருப்பதோடு அந்தப் போராட்டத்திற்கான நாளும் விரைவில் குறிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT