தமிழகம்

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓபிசி) 27 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு 20 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனாலும் மத்திய அரசுப் பணிகளில் 12 சதவீதத்துக்கும் குறைவான அளவே ஓபிசி பிரிவினரே உள்ளனர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்த விவரங்கள் பெறப்பட்டுள்ளன. சில துறைகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடும் முழுமையாக அமல்படுத்தப்படாத நிலை உள்ளது.

இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது அரசியல் சட்டத்தின் அடிப்படை கடமையாகும். அரசுத் துறைகள் இதனைப் புறக்கணிப்பது அரசியல் சட்டத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது மட்டுமல்ல, இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகும்.

எனவே, மத்திய அரசு அனைத்துத் துறைகளிலும் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டையும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டையும் முழுமையாக அமல்படுத்த வேண்டும்.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முன்னறிவிப்பின்றி ஒரேநாளில் அதிக அளவு நீர் திறக்கப்பட்டதே சென்னையில் ஏற்பட்ட மிகப்பெரிய சேதத்துக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான கல்தூண்களையும், கல் பலகைகளையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் குவித்து வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்த மத்திய அரசும், உத்தரப்பிரதேச அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT