மெட்ரோ ரயில் தூண்களுக்கு இடையே செடி நடுவதற்கான வேலையில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் டேங்கர் லாரி மோதி பலியானார்கள்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து பரங்கிமலை வரை மெட்ரோ ரயில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் அசோக் நகர் வரையிலான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த பாதையில் சில நாட்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டமும் நடைபெற்றது. மெட்ரோ ரயில் மேம்பாலத்தை தாங்கி பிடிக்கும் தூண்கள் 100 அடி சாலையின் நடுவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. இப்படி அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தூண்களுக்கு இடையிலும் செடிகள் நட்டு அழகு படுத்துவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. செடிகள் நடுவதற்கான முதற்கட்ட பணிகளாக தூண்களுக்கு இடையில் இருக்கும் இடத்தில் மணல் கொட்டி சமப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக இந்த பணியில் தொழிலாளிகள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
கோயம்பேடு நூறடி சாலை எப்போதும் போக்குவரத்து நெருக்கடியாக இருக்கும் என்பதால், இரவு 11 மணிக்கு பின்னர் இங்கு வேலைகள் தொடங்கப்படுவது வழக்கம். திங்கள் கிழமை இரவிலும் வழக்கம்போல பணிகள் தொடங்கின. வடபழனி திருநகர் பேருந்து நிறுத்தம் அருகே 13 தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடபழனியில் இருந்து கோயம்பேடு நோக்கி வேகமாக சென்ற டேங்கர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓட ஆரம்பித்தது.
பின்னர் அதே வேகத்தில் சாலை நடுவில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் சத்திரியன் (60), சங்கர் (35), ஆதிநாராயணன் (40), கிருஷ்ணன் (37) ஆகியோர் மீது பயங்கரமாக மோதி, மெட்ரா ரயில் மேம்பால தூண்களுக்கு இடையே இருந்த தடுப்பு சுவரில் மோதி நின்றது.
இந்த விபத்தில் சத்திரியன், சங்கர் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பாண்டிபஜார் காவல் துறையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சத்திரியன், சங்கர் ஆகியோரின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆதிநாரா யணன், கிருஷ்ணன் ஆகியோரும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால் ஆதிநாரா யணன் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். கிருஷ்ணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கோர விபத்து தொடர்பாக டேங்கர் லாரியின் ஓட்டுநர் சுப்ரமணி (57) கைது செய்யப்பட்டார். காவல் துறையினரிடம் அவர் கூறுகையில், “மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் திடீரென குறுக்கே வந்ததால் லாரியை திருப்பினேன். அது கட்டுப்பாட்டை இழந்து, விபத்து ஏற்பட்டு விட்டது” என்றார். அவர் தூக்க கலக்கத்தில் இருந்ததே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். லாரி ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் மது அருந்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. விபத்தில் பலியான மூன்று பேரும் ஆந்திர மாநிலம் விஜய நகரைச் சேர்ந்தவர்கள். சோழிங்கநல்லூரில் தங்கி மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டு வந்தனர்.