திமுக துணை பொதுச் செயலாளரும், சமூகநலத் துறை முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சற்குணபாண்டியன் (75), கடந்த 13-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
நேற்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடிய பிறகு பேசிய பேரவைத் தலைவர் பி.தனபால், ‘‘சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் சற்குணபாண்டியன் கடந்த 13-ம் தேதி மரணமடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏவாகவும் அமைச்சராகவும் அவர் சிறப்பாக பணியாற்றினார். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
பின்னர், சற்குணபாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.