சென்னை - எண்ணூரில் 4,956 கோடி ரூபாயில் கட்டப்படவுள்ள புதிய அதிவேக ஈனுலை அனல் மின் விரிவாக்க திட்டத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
'தமிழகத்தில் மின்சார பற்றாக்குறையைப் போக்க பல்வேறு புதிய மின் திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம், எண்ணூரில் ரூ.4,956 கோடி செலவில், 660 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அதிவேக ஈனுலை (supercritical) அனல் மின் விரிவாக்கத் திட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, எண்ணூர் மின் நிலைய விரிவாக்க அதிவேக ஈனுலை திட்டத்துக்கான, அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடந்தது.
தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். அனல் மின் நிலையத்தை ரூ.3,961 கோடி செலவில் நிறுவுவதற்கான பணி ஆணையை, லான்கோ இன்ப்ரா டெக் நிறுவனத்தின் செயல் தலைவர் எல்.மதுசூதன் ராவிடம் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
இத்திட்டத்தின் மூலம், குறைந்த அளவு நிலக்கரியில் அதிக அளவு மின் உற்பத்தியைப் பெற இயலும். இத்திட்டப் பணிக்கு, மார்ச் 3ம் தேதி தமிழக அரசின் அனுமதி வழங்கப்பட்டது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியோடு பிற அனுமதிகளும் பெறப்பட்ட பின், இந்தத் திட்டத்தை நிறுவுவதற்கான சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டது.
இந்த ஒப்பந்தப் புள்ளியில் ஹரியாணா மாநிலம், குர்கானில் அமைந்துள்ள லான்கோ இன்ப்ரா டெக் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இந்த அனல் மின் திட்டமானது, தமிழ்நாட்டில் நிறுவப்படும் முதல் அதி வேக ஈனுலை அனல் மின் திட்டமாகும்.
இந்நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் ஆர். விசுவநாதன், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், எரிசக்தித் துறைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கு. ஞானதேசிகன், லான்கோ இன்ப்ரா டெக் நிறுவன துணை மேலாண்மை இயக்குநர் எஸ்.சி. மனோச்சா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்' என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.