தமிழகம்

ட்விட்டரில் இணைந்தார் மர்ம கதை மன்னன் ஸ்டீபன் கிங்!

சைபர் சிம்மன்

ஸ்டீபன் கிங் ட்விட்டர் செய்யத் துவங்கியிருக்கிறார். மர்ம கதை மன்னன் என்று போற்றப்படும் கிங், ட்விட்டருக்கு வந்திருப்பது ஆச்சர்யம் அல்ல; அவர் இவ்வளவு தாமதமாக வந்திருப்பதுதான் ஆச்சர்யம். ஏனெனில், கிங் மற்ற எழுத்தாளர்களை எல்லாம் விட தொழில்நுட்பத்தின் அருமையை உணர்ந்தவர். அதைப் பயன்படுத்தவும் தெரிந்தவர்.

இ-புக் என்பது அதன் பிள்ளை பிராயத்தில் இருந்த போதே அந்த வடிவத்தை தழுவிக்கொண்டவர் கிங் என்பது தொழில்நுட்ப பிரியர்களுக்கு நினைவிருக்கலாம். 2000 ஆவது ஆண்டிலேயே கிங், 'ரைடிங் தி புல்லெட்' எனும் நாவலை எழுதி இபுக் வடிவில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். இந்தப் பரபரப்பு அப்போது இ-புக் பற்றி பலரையும் பேச வைத்தது. அதன் பிறகு 'தி பிலாண்ட்' எனும் நாவலை அவர் இணையத்திலேயே தொடராக வெளியிட்டார். 2009-ல் அவர் கிண்டில் 2 அறிமுகத்திற்காக 'யூஆர்' எனும் குறுநாவலை பிரத்யேகமாக வெளியிட்டார்.

கிங் தொழில்நுட்பத்தை அரவணைத்துக்கொள்ளும் வேகத்தின்படி பார்த்தால், அவர் குறும்பதிவு சேவையான ட்விட்டருக்கு எப்போதோ வந்திருக்க வேண்டும். குறும்பதிவு மூலமே ஒரு நாவலையும் எழுதுவது உட்பட பல ட்விட்டர் புதுமைகளை அவர் நிகழ்த்தியிருக்க வேண்டும். ஆனால், ஏனோ கிங் ட்விட்டருக்கு இத்தனை நாளாக வரவில்லை. தாமதமாக வந்தாலும் கிங்கின் ட்விட்டர் வரவு நல்வரவாகட்டும்.

இனி, கிங்கின் ட்விட்டர் வரவு பற்றி சில முக்கிய விவரங்கள். @ஸ்டீபன் கிங் என்பது கிங்கின் ட்விட்டர் முகவரி. உண்மையில் கிக், ஸ்டீபன்கிங் ஆத்தர் எனும் ட்விட்டர் முகவரியைதான் பயன்படுத்த விரும்பியிருக்கிறார். ஆனால் அது சற்றே நீளமாக இருப்பதால் ஆத்தரை விட்டுவிட்டார். கிங்கின் இந்த ட்விட்டர் பிரவேசம் அவரது பதிப்பக நிறுவனத்தின் ஆலோசனையின் படி நிகழ்ந்திருக்கிறது.

எல்லான் சரி, ட்விட்டரில் வந்திருப்பது உண்மையான கிங் தானா? ட்விட்டர் வெளியில் பிரபலங்களின் வருகையின் போது வரக்கூடிய நியாமான சந்தேகம்தான். ஆனால் கவலை வேண்டாம். இது சாட்சாத் ஸ்டீபன் கிங்கே தான். ட்விட்டரே இதை உறுதிபடுத்தி, அதிகாரப்பூர்வ கணக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது.

எனவே யாரும் கிங்கிடம் நீங்கள் கிங் தானே என்று கேட்டு சங்கப்டப்படுத்த வாய்ப்பில்லை. கிங்கின் முதல் குறும்பதிவு சும்மா ரகளையாகவே இருந்தது. 'நான் கன்னி. இது எனது முதல் ட்வீட், மென்மையாக நடந்து கொள்ளுங்கள்' என்று கூறியிருந்தார்.

இரண்டாவது ட்வீட்டும் சாதாரணமாக இருந்தது. இதற்குள் ட்விட்டர் வெளியில் கிங்கின் வருகை பற்றிய செய்தி பரவி அவரது கணக்கை பலரும் பின் தொடரத் துவங்கிவிட்டனர். முதல் ஒரு சில மணி நேரத்தில் 30,000 பின்தொடர்பாளர்கள். கிங் ரசிகர் பட்டாளத்துடன் ஒப்பிட்டால் இது குறைவுதான் என்பது வேறு விஷயம்.

இப்போது பின்தொடர்பாளர் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது. நிற்க, கிங் வந்த வேகத்தில் குறும்பதிவுகள் அவரது கணக்கில் ஆறாக பெருகியிருக்க வேண்டும். ஆனால் முதல் சில மணி நேரங்களில் மொத்தம் இரண்டே குறும்பதிவுகள் தான் செய்திருந்தார். அது மட்டுமா, என்ன பகிரவது எனத் தெரியவில்லை. எழுத்தாளர்களின் தடையில் சிக்கியிருக்கிறேன், என்பது போல குறிப்பிட்டிருந்தார்.

பக்கம் பக்கமாக அல்ல, புத்தகம் புத்தகமாக எழுதிக் குவிக்கும் பழக்கம் கொண்ட கிங் ட்விட்டரில் எழுத தடுமாறுவதாக கூறியது விநோதம்தான். அதற்காக கிங்கிறகு ட்விட்டர் புரியவில்லை என நினைத்துவிட வேண்டாம். 140 எழுத்துக்களுக்குள் எல்லாம் அடங்கிவிடும் ட்விட்டர் இலக்கணம் அவருக்கு நன்றாகவே புரிந்திருக்கிறது.

சந்தேகம் இருந்தால், 140 எழுத்து வரம்பு பற்றி கிங்கிற்கு ஆலோசனை கூறியவருக்கு அவர் அளித்த பதில் குறும்பதிவை பாருங்கள். 140 எழுத்தில் எவ்வளவோ சொல்ல முடியும். ஆங்கிலத்தில் வெறும் 26 எழுத்துக்களை கொண்டு எழுதவில்லையா என்பது போல கிங் கேட்டிருந்தார். அது தான் கிங்.

எழுத்துலக மன்னன் கிங்கிடம் இருந்து மேலும் எதிர்பார்க்கலாம்.

ஏற்கெனவே ட்விட்டரை பயன்படுத்தும் மார்கரெட் அட்வுட், சலமான் ருஷ்டி, ஜான் கிரீன் ஆகிய எழுத்தாளர்களின் பட்டியலில் கிங் சேர்ந்திருக்கிறார். செழிக்கட்டும் ட்விட்டர் இலக்கியம்.

கிங் ட்விட்டர் முகவரி: >https://twitter.com/StephenKing

SCROLL FOR NEXT