தமிழகம்

சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து ஐ.ஓ.சி.யை முற்றுகையிட முயன்றவர்கள் கைது

செய்திப்பிரிவு

மானியமில்லா சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தை (ஐ.ஓ.சி) முற்றுகையிட முயன்ற 74 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக் கழகம் சார்பில் பல்வேறு அமைப்பினர் இணைந்து, மானியமில்லா சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து புதுச்சேரி ஐ.ஓ.சி.யை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி திங்கள்கிழமை வில்லியனூர்-ஒதியம்பட்டு நான்கு முனை சந்திப்பில் இருந்து நுகர்வோர் பாதுகாப்புக் கழகத்தின் பொதுச்செயலர் முருகானந்தம் தலைமையில் ஊர்வலமாகச் சென்றனர்.

பின்னர், ஐ.ஓ.சி. ஆலை முன்பு தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஐ.ஓ.சி.யை முற்றுகையிட முயன்ற 74 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுதொடர்பாக முருகானந்தம் கூறியதாவது:

மானியம் இல்லாத சிலிண்டர் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். ஆண்டுக்கு 12 சிலிண்டர் மானியம் தர வேண்டும். ஆதார் அட்டை அலைக்கழிப்பு இல்லாமல், சிலிண்டர் மானியத்தை தர வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தினோம். காலையில் காவல்துறையினர் கைது செய்து பிற்பகலுக்கு முன்னதாகவே விடுவித்தனர் என்று தெரிவித்தார். இப்போராட்டத்தில் இதர அமைப்புகளைச் சேர்ந்த அழகிரி, ஜெகநாதன், தமிழ்மணி, சந்திரசேகரன் உட்பட பல முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT