சத்தீஸ்கர் மாநில மக்களை தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து மீட்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள கொட்டச்செரு கிராமப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் (ராணுவ வீரர்கள்) மீது வெடிகுண்டு தாக்குதலும், துப்பாக்கிச் சூடும் நடந்தது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.இதில் தமிழகம், விழுப்புரம் மாவட்டம் கழுமர கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சங்கர் உள்பட 12 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் தீவிரவாதிகளால் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள், கொலைச் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கரில் வனப்பகுதியை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் தற்போது சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பகுதிகளுக்கு நக்சல் தீவிரவாதிகளால் பேராபத்து இருப்பதால் சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தபோது தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தி, வீரர்களின் ஆயுதங்களைப் பறித்துச் சென்றனர். இக்கொடூரச் சம்பவத்தால் பாதுகாப்பு பணியில் இருந்த 12 சிஆர்பிஎஃப் வீரர்கள் சம்பவ இடத்திலே பலியாயினர். தமிழக வீரர் சங்கர் உட்பட பலியான சிஆர்பிஎஃப் அனைவருக்கும் வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் பல சிஆர்பிஎஃப் வீரர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் பலியான சிஆர்பிஎஃப் வீரர்கள் அனைவரது குடும்பத்திற்கும் உரிய நிவாரணம் வழங்கி, அரசு வேலை வாய்ப்பும் வழங்கிட வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வீரர்கள் அனைவருக்கும் சிறப்பு மருத்துவ சிகிச்சை அளித்து நிவாரணம் வழங்கிட வேண்டும்.
மேலும் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்று வருகின்ற இது போன்ற தொடர் தாக்குலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய பாஜக அரசு தீவிர கவனம் செலுத்தி, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
சத்தீஸ்கர் மாநில மக்களை தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து மீட்க வேண்டியது மத்திய அரசின் கடமை. மேலும் நாட்டு மக்களையும், நாட்டையும் பாதுகாக்க பல்வேறு இன்னல்களைத் தாங்கிக்கொண்டு, தங்கள் உயிரையும் பணயம் வைக்கும் ராணுவ வீரர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்திற்கும் மத்திய, மாநில அரசுகள் அனைத்து உதவிகளையும், சலுகைகளையும் வழங்கிட வேண்டும்.
நாட்டிற்காக உயிரிழந்திருக்கின்ற தமிழகம், விழுப்புரம் மாவட்டம் கழுமர கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சங்கர் அவர்களது குடும்பத்திற்கு தமாகா சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று வாசன் கூறியுள்ளார்.