தமிழகம்

கோவை மாவட்டத்தில் வாடும் விவசாயிகளை காப்பாற்றுமா பருவமழை?

ஆர்.கிருஷ்ணகுமார்

கோவை மாவட்டத்தில் தற்போது தீவிரமடைந்துள்ள பருவமழை வறட்சியால் வாடும் விவசாயிகளைக் காக்கும் அளவுக்கு தொடர வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு சராசரி மழையளவைக் காட்டிலும் பாதிக்கும் குறைவான அளவே மழை பெய்துள்ள நிலையில், நடப்பாண்டில் தொடங்கியுள்ள மழை தொடர்ந்தால்தான் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்.

கோவை மாவட்டத்தின் சராசரி மழையளவு 679.77 மில்லி மீட்டர். கடந்த 2010-ம் ஆண்டில் 717.23 மில்லி மீட்டரும், 2011-ல் 905.40, 2012-ல் 411.40, 2014-ல் 583.13, 2014-ல் 696.98, 2015-ம் ஆண்டில் 768.34 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

ஆனால், கடந்த 2016-ம் ஆண்டில் 306.20 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. சராசரி மழையளவைக் காட்டிலும் 51.41 சதவீதம் குறைவாகப் பெய்ததால், விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளாக இல்லாத வறட்சி நிலவுவதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். கோவை மாவட்டத்திலும் வறட்சி காரணமாக வேளாண் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்க வேண்டிய தென்மேற்குப் பருவமழையும் தொடங்கவில்லை. இதற்கிடையில், கடந்த ஒரு வாரமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

பொள்ளாச்சி அருகேயுள்ள குரங்கு அருவியில் தற்போது அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை குற்றாலம் அருவியும் மூடப்பட்டுவிட்டது. வறண்டு காணப்பட்ட நொய்யல் ஆற்றிலும் நீர்வரத்து தொடங்கியுள்ளது.

இது வரை 351.60 மி.மீ.

கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை சராசரியாக 351.60 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டம் முழுவதும் மொத்தம் 449 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

தற்போது 160 அடி உயரம் கொண்ட சோலையாறு அணையில் 72.74 அடியும், 120 அடி உயரம் கொண்ட ஆழியாறு அணையில் 70 அடியும், 72 அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணையில் 8.5 அடியும், 160 அடி உயரம் கொண்ட பில்லூர் அணையில் 89 அடியும், 105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையில் 40.80 அடியும் தண்ணீர் உள்ளது.

எனினும், மழை தொடர்ந்தால் மட்டுமே அணைகளின் நீர் இருப்பு கணிசமான அளவுக்கு உயரும்.

இது குறித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.கந்தசாமி ‘தி இந்து’விடம் கூறியதாவது: கடந்த ஆண்டு கடும் வறட்சியால் வேளாண் சாகுபடிக்கு செய்த மூலதனத்தையே இழந்து, அரசின் நிவாரண உதவித்தொகைக்காக காத்திருக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

தற்போதுதான் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இது மிகக் குறைந்த அளவுதான். எங்களுக்குத் தேவையான அளவு மழையில் சுமார் 5 சதவீதம் மட்டுமே தற்போது பெய்துள்ளது.

நொய்யலில் தண்ணீர் வரத்து தொடங்கினாலும், அது தொடர வேண்டுமெனில் இதுபோல பல மடங்கு மழை பெய்ய வேண்டும். பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில்தான் மழை பெய்துள்ளது. அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை இல்லை.

மழை பெய்தால்தான் மஞ்சள், சின்னவெங்காயம், வாழை, காய்கறிகள், சோளம், கொள்ளு, துவரை சாகுபடிக்கு உதவியாக இருக்கும். எனவே, தொடங்கியுள்ள மழை, தொடர்ந்து பரவலாகவும், பலத்த மழையாகவும் பெய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு என்றார்.

‘தொடர்ந்து பெய்யும்’

வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறும்போது, “கோவை மாவட்டத்தைப் பொருத்தவரை சற்று தாமதமாக மழை தொடங்கியிருந்தாலும், தொடர்ந்து பெய்யும் என்று நம்புகிறோம். கடந்த 6 மாதங்களில் சராசரி மழையளவில் பாதியளவுக்கு மேல் மழை பெய்துள்ளது. தற்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நடப்பாண்டில் சராசரி மழையளவைக் காட்டிலும் அதிக மழை இருக்கும். செப்டம்பர் மாதம் வரை மழை இருக்கும் என்று கருதுகிறோம்.

இந்த மழை வேளாண் சாகுபடிக்கு மட்டுமின்றி, குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கவும் உதவியாக இருக்கும்” என்றனர்.

SCROLL FOR NEXT