தமிழகம்

சென்னை மாநகராட்சியுடன் இணைந்து என்ன பயன்? - புறநகர்ப் பகுதி மக்கள் கேள்வி

செய்திப்பிரிவு

மாநகராட்சியோடு இணைக்கப் பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் அடிப்படை வசதிகள் முழுமையாக செய்து முடிக்கப்படவில்லை என்று புறநகர்ப் பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஏழு நகராட்சிகள், மூன்று பேரூராட்சிகள், 13 ஊராட்சிகள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து இரண்டு நகராட்சிகள், ஐந்து பேரூராட்சிகள், 12 ஊராட்சிகள் சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்டன. இதனால் 174 சதுர கி.மீ. பரப்பளவாக இருந்த சென்னை மாநகர் 426 சதுர கி.மீ. ஆக விரிந்தது.

சாலைகள் இல்லை

விரிவுபடுத்தப்பட்ட மாநகராட்சிப் பகுதிகளான மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்க நல்லூர், உள்ளகரம் புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில் மிக முக்கிய பிரச்சினையாக இருப்பது குண்டும் குழியுமான சாலைகள். பல இடங் களில் சாலைகளே இல்லை. ரயில் வசதி அதிகம் இல்லாத மணலி, மாதவரம் பகுதிகளில் மக்கள் பஸ் களையே நம்பி இருக்கின்றனர். இப்பகுதிகளில் உட்புறச் சாலை களே போடப்படவில்லை. பெருங் குடி, கல்லுக்குட்டை, தரமணி பகுதியிலும் இதே நிலைதான்.

எரியாத விளக்குகள்

தெரு விளக்குகள் சில இடங்களில் சரியாக எரியாதது, செயின் பறிப்பு, வழிப்பறி கொள்ளையருக்கு வசதி யாக உள்ளது. இதனால் பெண்களும் குழந்தைகளும் வெளியில் நட மாடவே அஞ்சுகின்றனர். மாதவரத் தைச் சேர்ந்த பாரதி கூறும்போது, “லட்சுமிபுரம், விநாயகபுரம், புத்தகரம் பகுதிகளில் புதிதாக தெரு விளக்கு கம்பங்கள் நடப்பட்டன. ஆனால், இன்னும் விளக்குகள் பொருத்தவில்லை. ஊராட்சியாக இருந்தபோது, தலைவரை நேரில் சந்தித்து பிரச்சினைகளை கூறினோம். இப்போது கவுன்சிலர் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் இல்லை என்பதால் நிலைமை மோசமாகிவிட்டது” என்றார்.

தெருக்களில் வழியும் கழிவுநீர்

மழைநீர் வடிகால்வாய்களும் பாதாளச் சாக்கடைகளும் பல இடங்களில் அமைக்கப்படவில்லை. ஒருநாள் மழை பெய்தாலே சாலை யில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்பதும் கழிவுநீர் தெருக்களில் ஓடுவதும் வாடிக்கையாகி விட்டது. திருவொற்றியூரில் சுங்கச் சாவடியில் இருந்து எர்ணாவூர் மேம்பாலம் வரை 5 கி.மீ. தூரம், 66 அடி அகல மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி ஏழு ஆண்டு களாக முடிக்கப்படாமல் உள்ளது. இதற்காக தோண்டப்பட்ட பள்ளங் களை மூடவில்லை இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

தரமணி சி.எஸ்.ஐ.ஆர். சாலையில் இதேபோன்று மூடப் படாத மழைநீர் வடிகால்வாயில் கடந்த ஜூன் மாதம் ஒரு சிறுவன் விழுந்து இறந்தான்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, “வரும் திங்கள்கிழமை 1200 புதிய தெரு விளக்குகள் பொருத்த ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன. புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் ரூ.4,500 கோடி செலவில் 1133 கி.மீ. தூரத்துக்கு மழை நீர் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது விரைவில் அமல்படுத்தப்படும்” என்றனர்.

விரிவாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள், போதிய மருத்துவர்கள் இல்லா மலும் பராமரிப்பு இல்லாமலும் இருக்கின்றன. திருவொற்றியூரைச் சேர்ந்த எஸ்.கிருஷ்ணன் கூறுகை யில், “திருவொற்றியூர் விம்கோ நகர் மற்றும் தேரடி பகுதியில் உள்ள இரண்டு மருத்துவமனைகளுக்கும் ஒரே மருத்துவர்தான் உள்ளார். பல நேரங்களில் நர்சுகள் ஏதேனும் மாத்திரை கொடுத்து அனுப்பிவிடுகின்றனர்’’ என்றார்.

இதுமட்டுமின்றி, விரிவுபடுத்தப் பட்ட பகுதிகளின் கல்வித் துறை இன்னும் மாநகராட்சியோடு இணைக்கப்படவில்லை. அவை இன்னும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகங்களின் கீழ்தான் உள்ளன.

SCROLL FOR NEXT