தமிழகம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தால் விழிப்புணர்வு: நாட்டு மாடு, பாலுக்கு பொதுமக்களிடம் வரவேற்பு

வி.சீனிவாசன்

ஜல்லிக்கட்டு போராட்டத்தால் ஏற்பட்ட விழிப்புணர்வால், நாட்டு மாடுகளின் மீதான மோகம் மக்கள் பக்கம் திரும்பியுள்ளதால், நாட்டு மாடுகள் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. பால் லிட்டர் ரூ.100-க்கு விற்பனை செய்யப் படுகிறது. நாட்டு மாடுகள் வளர்ப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

இந்திய வரலாற்றில் இடம் பிடித்த ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகத்தில் கடந்த ஜனவரி 19-ம் தேதி அரங்கேறியது. மதுரை அலங்காநல்லூரில் ஒரு வாரமும், சென்னை மெரினாவில் 6 நாட்களும், பிற மாவட்டங்களில் 5 நாட்கள் பொதுமக்கள் போராட்டத் தில் ஈடுபட்டு உலக மக்களை தங்கள் வசம் திரும்பி பார்க்கும் வகையில் அறப்போராட்டத்தை அரங்கேற்றி, அதில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

இந்நிலையில், நாட்டு மாடுகள் மற்றும் பால் விற்பனை அதிகரித்து இருப்பதும், நாட்டு மாடுகளை வளர்ப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மைய துறைத் தலைவர் ஜெயந்தி கூறியதாவது:

தமிழகத்தில் நடந்த ஜல்லிக் கட்டு போராட்டத்துக்கு பின்னர், நாட்டு மாடுகளின் விற்பனை அதிகரித்துள்ளது. நாட்டு மாடுகளை விரும்பி வாங்கு பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் பல்வேறு கிராமங்களில் நடக்கும் மாட்டு சந்தைகளில் நாட்டு பசு மாடுகளை பலரும் ஆர்வமுடன் வாங்கி சென்று வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த கிர், சிவப்பு சிந்திஓங்கோல், அலிகார், காங்கேயம், சாகிவால், மால்வி என நாடு முழுவதும் 21 வகையான நாட்டு மாட்டு இனங்கள் உள்ளன. ஐஸ்லேண்டைச் சேர்ந்த ஜெர்சி, ஹாலந்தைச் சேர்ந்த ஹால்டீன்பிரிசியன், சுவிட்சர்லாந்தை சேர்ந்த சுவிஸ் பிரவுன், டென்மார்க்கை சேர்ந்த ரெட்டேன் ஆகிய சீமை கலப்பின பசுக்கள் நம் நாட்டில் மிகுதியாகி விட்டன. நாட்டு மாட்டு இனங்களை விட அதிகளவு பால் கொடுக்கும் சீமை மாடுகளை விவசாயிகள் பொருளாதார ரீதியான முன்னேற்றத்துக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, நாட்டு மாட்டு பாலில் மிகுதியான சத்துப்பொருட்கள் உள்ளது என்பதாலும், சீமை பசுக்களின் பால் உடலுக்கு ஏற்றதல்ல என்ற விழிப்புணர்வு மக்களின் மனதில் பரவலாக எழும்பியுள்ளது.

இதன் காரணமாக நாட்டு மாட்டின் பால் லிட்டர் ரூ.100 வரை யில் விற்பனை செய்யப்படுகிறது. காங்கேயம், கிர் உள்ளிட்ட நாட்டு மாடுகள் ரூ.ஒரு லட்சத்துக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு முன்னர் நாட்டு மாடுகள் ரூ.25 ஆயிரம், ரூ.35 ஆயிரம் என்ற விலையிலேயே விற்பனையாகி வந்த நிலையில், மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வால், நாட்டு மாடு வளர்ப்பு, விற்பனையும், விலையும் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT