கொடநாட்டில் நடந்திருக்கும் மர்மமான கொலைக்கு உரிய முறையில் விசாரணை நடத்தி, நீதியை நிலை நாட்ட வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, "கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை என்ற செய்தி காலையில் கிடைத்தது.
ஜெயலலிதா அடிக்கடி சென்று தங்கிவந்த இடமான கொடநாட்டில் காவலாளியாக இருக்கக்கூடியவர், மர்ம மனிதர்களால் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். சட்டம், ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு ஒரு சாட்சியை, சான்றை காட்ட வேண்டிய அவசியமில்லை.
அதுமட்டுமல்ல, ஜெயலலிதா மறைந்த பிறகு, கொடநாடு யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதே மர்மமாக இருக்கிறது.
எனவே, ஜெயலலிதா மர்ம மரணத்தை விசாரிப்பது போலவே, அவர் அவ்வப்போது சென்று ஓய்வெடுத்து வந்த கொடநாட்டில் நடந்திருக்கும் மர்மமான கொலைக்கும் உரிய முறையில் விசாரணை நடத்தி, நீதியை நிலை நாட்ட வேண்டும்" என்றார்.
திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களிடம் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து, அவற்றை தெரிவிக்க மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்தபோது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.