தமிழகம்

கச்சத்தீவு: மத்திய அரசின் மனு மனம் நோகச் செய்கிறது- கருணாநிதி அறிக்கை

செய்திப்பிரிவு

கச்சத்தீவு பிரச்சினையில் தமிழர்களின் மனதை நோகச் செய்யும் வகையில், மத்திய அரசு மனுதாக்கல் செய்துள்ளது என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் திங்கள்கிழமை வெளியிட்ட கேள்வி, பதில் அறிக்கை வருமாறு:

கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க தமிழக மீனவருக்கு உரிமை இல்லை என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூட கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று கூறியிருக்கிறார். கச்சத் தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறுவதும், அதில் மத்திய அரசு ஒரு மனுவை தாக்கல் செய்வதும் தமிழர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத காரியமாகும்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாக மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கலாம். அதற்கு மாறாக தமிழர்களின் மனதை நோகடிப்பதற்காகவே இப்படியொரு மனுவை, மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது தமிழர்கள் அனைவராலும் கண்டிக்கப்படத் தக்கதாகும்.

ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டம் வரும் மார்ச்சில் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியாவே தனி தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். ஈழத்தமிழர் பிரச்சினையில் நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கு ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில், பொது வாக்கெடுப்பு வேண்டுமென்று திட்டவட்டமாகக் குறிப்பிட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை.

தற்போது பெரும்பாலான இடங்களில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இயங்காத நிலையில், தனியார் சர்க்கரை ஆலைகள் மட்டும்தான் அரவையைத் துவக்கியுள்ளன. ஆனால், இந்த ஆலைகளிலும் அரசு அறிவித்த விலையைக் கூட வழங்காமல், 2013ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டிருந்த 2,250 ரூபாயை மட்டுமே கொடுக்கிறார்கள். இதனால் கரும்பு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT