மத்திய அரசின் ‘உதய்’ மின் திட்டத்தில் 21-வது மாநிலமாக தமிழகம் இணைந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், டெல்லியில் நேற்று கையெழுத் தானது. இதன்மூலம் ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒட்டுமொத்த பயன்கள் தமிழகத்துக்கு கிடைக்கும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மாநிலங்களின் மின் விநியோகத் திறனை மேம்படுத்தவும், மின் உற்பத்தி விலை மற்றும் மின் விநியோக அமைப்புகளின் வட்டிச் சுமையை குறைக்கவும் ‘உஜ்வால் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜனா’ (உதய்) என்ற திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு அறிவித்தது. ‘2015 செப்டம்பர் வரை மாநில மின் வாரியங்களின் மொத்த கடனில், 75 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்க வேண்டும், மின் கட்டணத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்க வேண்டும், மின் இழப்பை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன. நாடு முழுவதும் இதுவரை 20 மாநிலங்கள் இத்திட்டத்தில் இணைந்துள்ளன. இதுவரை இத்திட்டத்தில் தமிழகம் இணை யாமல் இருந்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெய லலிதா, இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், இத்திட்டத்தில் மிக முக்கிய அம்சமான காலாண் டுக்கு ஒருமுறை மின் கட்டண மாறுதல் செய்யும் நிபந்தனையை நீக்க வேண்டும், தமிழக அரசு வெளியிடும் நிதிப் பத்திரங்களின் முதிர்வு கால அளவு 15 ஆண்டு களாக இருக்க வேண்டும் என்ற திருத்தங்களை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதால் ‘உதய்’ திட்டத்தில் சேர தமிழக அரசு முடிவு செய்தது.
டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயலும், தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணியும் கையெழுத்திட்டனர்.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்
இத்திட்டத்தின்கீழ், வட்டித் தொகையில் சேமிப்பு, தொழில் நுட்பம், வணிக ரீதியான இழப்பு, மின்சாரத்தை கொண்டு செல்லுதல் ஆகியவற்றில் ஏற்படும் இழப்பைக் குறைத்தல், பயனுள்ள வகையில் எரிசக்தி, நிலக்கரி சீர்திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்ளுதல் போன்றவைகளால் தமிழகம் சுமார் ரூ.11,000 கோடி மதிப்பிலான ஒட்டுமொத்த நிகர பயன்களைப் பெறும்.
‘உதய்’ திட்டத்தில் கையெழுத் திட்டதன் மூலம் தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (டான்ஜெட்கோ) 75 சதவீத கடன் தொகையான ரூ.30,420 கோடியை மாநில அரசு ஏற்றுக் கொள்ளும். மீதமுள்ள கடனுக்கு தற்போதைய வட்டி விகிதத்தில் இருந்து 3 முதல் 4 சதவீதம் குறைவான சலுகை விலையில் மறுவிலை நிர்ணயிக்கவோ அல்லது மாநில அரசு உறுதிப் பத்திரங்களை வெளியிடவோ இத்திட்டம் வழிவகை செய்கிறது. கடன் குறைப்பு மற்றும் மீதமுள்ள கடன் மீதான குறைக்கப்பட்ட வட்டி விகிதங்கள் மூலம், வருடாந்திர வட்டித் தொகையில் சுமார் ரூ.950 கோடி அளவுக்கு சேமிக்க இயலும்.
தொழில்நுட்ப, வணிக ரீதியான இழப்பு மற்றும் மின்சாரத்தை கொண்டு செல்வதில் ஏற்படும் இழப்பை முறையே 13.5 சதவீதம் மற்றும் 3.7 சதவீதமாகக் குறைப் பதன் மூலம் ‘டான்ஜெட்கோ’வுக்கு கூடுதலாக ரூ.1,601 கோடி வருவாய் கிடைக்கும்.
மேலும், எரிசக்தி திறனுள்ள எல்இடி பல்புகள், விவசாய பம்புகள், மின்விசிறிகள், குளிர் சாதனங்கள் மற்றும் தொழிற்சாலை சாதனங்கள் போன்றவற்றின் பயன்பாடு மூலம், உச்சபட்ச உயர் அழுத்த எரிசக்தியை குறைத்தல், உயர் அழுத்த மின் தேவையை குறைத்தல் ஆகியவை தமிழகத்தின் எரிசக்தி பயன்பாட்டை குறைக்கும். இதன்மூலம் ரூ.2,304 கோடி லாபம் கிடைக்கும்.
திட்டத்தில் தெரிவித்துள்ளபடி செயல்பாடுகளுக்கான இலக்கை மாநில அரசு நிறைவு செய்தால், தீன்தயாள் உபத்யாயா கிராம ஜோதி திட்டம், ஒருங்கிணைந்த எரிசக்தி வளர்ச்சித் திட்டம், எரிசக்தி துறை வளர்ச்சி நிதி, எரிசக்தி மற்றும் புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற இதர திட்டங்களில் கூடுதல் நிதியைப் பெற முடியும்.
மேலும், அறிவிக்கப்பட்ட விலைகளில் கூடுதல் நிலக்கரி மாநிலத்துக்கு கிடைக்க ஆதரவு அளிக்கப்படும். அத்துடன், வாடிக் கையாளர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்கும். இதன்மூலம் வேலை வாய்ப்புகள் பெருகும்.