ஆர்.கே.நகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் மதிவாணனை ஆதரித்து தேமுதிக மகளிர் அணி தலைவர் பிரேமலதா கொருக்குபேட்டை அம்பேத்கர் நகர், பாரதி நகர், காமராஜ் நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசும்போது, 'ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுகவின் ஒரு அணி பணப்பெட்டியை வைத்து பிரச்சாரம் செய்கிறது. மற்றொரு அணி பிணப்பெட்டியை வைத்து பிரச்சாரம் செய்கிறது. ஆளுங்கட்சி அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் ரூ.89 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்குக்கு பணம் கொடுத்ததாக இன்று மட்டும் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளையடித்து அந்த பணத்தை வாக்காளர்களுக்கு அளிக்கிறார்கள். அதிமுக ரூ.4000 கொடுக்கிறது. திமுக ரூ.2000 கொடுக்கிறது.
பணம் கொடுப்பதற்கு பதிலாக தெருக்களை சுத்தப்படுத்தியிருக்கலாம். மருத்துவமனைகளில் வசதிகளை மேம்படுத்தி இருக்கலாம். ரேஷனில் பொருட்கள் கிடைக்கச் செய்திருக்கலாம். பணம் வாங்கிவிட்டோம் என நினைக்காதீர்கள். லஞ்சம், ஊழல் அற்ற ஆட்சி அமைக்க தேமுதிகவுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.