தமிழகம்

கூடலூர் அருகே மீண்டும் புலி நடமாட்டம்: கேமராவில் பதிவானதால் மக்கள் பீதி

செய்திப்பிரிவு

கூடலூர் அருகே கால்நடைகளைக் கொன்றுவரும் புலி உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நெலாக்கோட்டையில் விலங்கூர் என்ற பகுதியில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு பசுவை புலி கொன்றது. புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வனத்துறையினரை அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினர்.

புலி நடமாட் டத்தைக் கண்டறிய 4 இடங்களில் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தினர். இந்நிலையில், பசுவைக் கொன்ற இடத்தில் உள்ள குட்டையில் புலி தண்ணீர் குடித்துவிட்டு செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. மேலும், நேற்று முன்தினம் இரவும் அதே பகுதிக்கு புலி மீண்டும் வந்து சென்றதும் பதிவாகி உள்ளது. புலி ஊருக்குள் வந்து சென்றுள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கூண்டு வைத்து புலியை பிடிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

வனத்துறையினர் கூறும்போது, “சில தினங்களுக்கு புலியை கண்காணித்து, அதன் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும்” என்றனர்.

SCROLL FOR NEXT