டிசம்பர் 26 - 2004 காலைப் பொழுதை நாம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆழிப் பேரலையை உருவாக்கி தமிழகக் கடற் கரையைப் பிணக்காடாக்கிய நாள் அது. சென்னை முதல் நாகப்பட்டினம் வரை கடல் பொங்கி அழித்தாலும் நாகை மாவட்டத்தில் சுனாமி ஏற்படுத்தியது என்றைக்கும் மாறாத வடு. உயிரிழப்புக்களைத் தவிர்த்து ஏற்பட்ட சேதத்தின் மொத்த மதிப்பு ரூ.733 கோடி.
பழையாறு தொடங்கி கோடியக்கரை வரை 187 கி.மீ. தூரம் கடற்கரையிலேயே அமைந்திருக்கும் மாவட்டம் என்பதால் ஆழிப் பேரலையால் அதிகம் பாதிக்கப்பட்டது. இம்மாவட்டத்தில் சுனாமியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,065.
நாகை இப்போது எப்படி இருக்கிறது?
பாதிப்பிலிருந்து கிட்டத்தட்ட மீண்டுள்ளது நாகை. உலக வங்கி, மத்திய அரசு, மாநில அரசு, தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என்று அனைவரும் ஒன்றுசேர்ந்து இழப்பின் சுவடு தெரியாமல் செய்துவிட்டார்கள். உயிரிழந்தவர்களில் 5,007 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம், குடியிருப்புக் களை இழந்த 19,505 பேருக்கு புதிய வீடுகள், மீனவர்களின் கூட்டுறவுக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி, 10,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு புதிய பைபர் படகுகள், விசைப்படகுகள் வாங்க 5 லட்ச ரூபாய் மானியத்தில் கடன், வலைகள் மற்றும் கட்டுமரங்களுக்குத் நிவாரணம் என்று பல தொண்டு நிறுவனங்களோடு சேர்ந்து, அரசு மீனவர்களை இழப்பிலிருந்து மீட்டுள்ளது. பழைய உறசாகத்தை மீனவர்கள் மீண்டும் மெல்ல அடைந்து வருகிறார்கள். மீனவப் பெண்களும் சோகத்தை மாற்றிக்கொண்டு சுயஉதவிக் குழுக்கள் மூலம் பல்வேறு தொழில்கள் செய்யும் நிலைமைக்கு வந்திருக்கிறார்கள்.
ஒப்படைக்கப்படாத குடியிருப்புகள்
மீனவர்கள் கொடுத்த கணக்கின்படி வீடுகள் கட்டப்பட்டாலும், இன்னமும் பல வீடுகள் ஒப்படைக்க ஆளில்லாமல் கிடக்கின்றன. ஒப்படைக்கப்பட்ட வீடுகளிலும் பெரும்பாலான வீடுகளை உள் வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். சிறிய மழைக்கே தண்ணீர் தேங்கிவிடும், கழிவுநீர் செல்ல வசதி செய்யப்படாத குடியிருப்புக்கள் நாகையில் பல இடங்களில் உள்ளன.. அதனால் டாட்டா நகர், சேவாபாரதி குடியிருப்புகளில் சாக்கடை தேங்கி நிற்கிறது. சில தொண்டு நிறுவனங்கள் கட்டிக் கொடுத்த வீடுகள் சேதமடைந்த நிலையிலும் உள்ளன. அரசு கட்டிக்கொடுத்த பாதிக்கும் மேற்பட்ட குடியிருப்புக்களில் கழிவறை வசதி இல்லை.
ஆழிப்பேரலைச் சீற்றத்தில் இழந்தது பொருட்கள் என்றால் மறந்துவிடலாம். ஆனால், பறிகொடுத்தது பாசமிக்க உறவுகள் என்கிறபோது என்றைக்கும் மறக்க முடியாதது அந்த சுனாமி சோகம்.