தமிழகம்

மெரினா கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயம் 10 மாணவர்கள் கைது: போலீஸாரிடம் வாக்குவாதம் செய்த பெற்றோர்

செய்திப்பிரிவு

மெரினாவில் மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்திய 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மெரினா காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலையில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரை நோக்கி 5 மோட்டார் சைக்கிள்களில் 10 பேர் அதிவேகமாக சென்றனர். மோட்டார் சைக்கிள்களின் சத்தம் காதை கிழிக்க, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சாலையில் இருந்த சிக்னல்களையும் மதிக்காமல் அவர்கள் வேகமாக சென்றனர். அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீஸார் உடனடியாக கலங்கரை விளக்கம் அருகே இருந்த போலீஸாருக்கு தகவல் அனுப்பி, அங்கே சாலை தடுப்புகளை ஏற்படுத்தி, போலீஸாரையும் குவித்து வைக்க, மோட்டார் சைக்கிள் பந்தயம் வந்தவர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் திணறினர். அங்கே நின்றிருந்த போலீஸார் உடனடியாக 10 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களின் மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

10 பேரையும் போலீஸார் அண்ணா சதுக்கம் போக்குவரத்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் சென்னை வில்லிவாக்கம் பலராமபுரம் 3-வது தெருவை சேர்ந்த நாத்(19), வள்ளியம்மாள் நகரை சேர்ந்த சண்முகம்(19), சிட்கோ நகரை சேர்ந்த டில்லி கணேஷ்(19), பாரதி நகரை சேர்ந்த விஷ்ணுவர்தன்(18), ஜம்புலிங்கம் பிரதான சாலையை சேர்ந்த பரத்(21), கொளத்தூர் முருகன் நகரை சேர்ந்த பிரபு(20), பூம்புகார் நகரை சேர்ந்த சந்தோஷ்(19), கண்ணகி நகரை சேர்ந்த விஷ்ணு(19) மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட 2 பேர் என்பது தெரிந்தது. 10 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 10 பேரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே காவல் நிலையம் வந்த பெற்றோர்களிடம், “மாணவர்களுக்கு அதிக திறன் வாய்ந்த மோட்டார் சைக்கிள்களை வாங்கி கொடுக்கக் கூடாது. பிள்ளைகளின் மீதான பாசத்தை இப்படி வெளிக்காட்டக் கூடாது” என்று அங்கிருந்த போலீஸார் சில அறிவுரைகளை வழங்கினர். மாணவர்களை கைது செய்திருப்பதாக அறிவித்ததும் சில பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து போலீஸாருடன் வாக்குவாதம் செய்தனர்.

SCROLL FOR NEXT