சிறுமி ரித்திகா குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் வட்டம், எர்ணாவூர் கிராமம், சுனாமி குடியிருப்பு எண் -3ல் வசித்து வரும் பழனி என்பவரின் மகள் சிறுமி ரித்திகா என்பவரின் சடலம் 19.2.2017 அன்று திருவொற்றியூர் குப்பை மேட்டில் காவல் துறையினரால் கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன்.
சிறுமி ரித்திகாவின் உயிரிழப்புக்கு காரணமான குற்றவாளியை உடனடியாக தேடிக் கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுத் தரவும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
உயிரிழந்த சிறுமி ரித்திகா குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரின் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்'' என்று பழனிசாமி தெரிவித்துள்ளார்.