தமிழகம்

உறவும் நட்பும் ஒருவழிப் பாதையல்ல: கம்யூ. உறவு குறித்து கருணாநிதி கருத்து

செய்திப்பிரிவு

உறவும் நட்பும் ஒருவழிப் பாதையல்ல என்று கம்யூனிஸ்ட் உடனான உறவு குறித்து திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து தனியார் இணைய தளம் ஒன்றுக்கு கருணாநிதி அளித்துள்ள பேட்டி:

அண்ணாவுக்கு அடுத்தது கருணா நிதி, உங்களுக்குப் பின் யார் - சொல் மற்றும் செயல் வண்ணத்தில்?

திமுக ஜனநாயகப் பேரியக்கம் என்பதால், கட்சியின் பொதுக்குழுவே முடிவு செய்யும்.

இலங்கைப் பிரச்சினையில் காங்கிரஸின் செயல்பாடுகளால் ஏற்பட்ட அதிருப்தியில் இருந்து மீட்டுக் கொள்ளும் வகையில்தான் கூட்டணியை திமுக முறித்ததா?

காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் என்னிடத்தில் அன்பும் பரிவும் நன்றியும் உடையவர்களாக இருந்தபோதிலும், தமிழகத்தில் உள்ள அக்கட்சியின் தலைவர்கள், அந்த நிலையில் மாறுபாடு உடையவர்களாக இருந்ததும் ஒரு காரணம்.

ஈழத்தமிழர் பிரச்சினை, தமிழகத் தேர்தல் களத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதுகிறேன். இதில் உண்மையாக உழைப்போர் யார், நடிப்போர் யார் என்பதைத் தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பா.ஜ.க.வில் வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில்தான், குஜராத் இனப் படுகொலை நிகழ்ந்தது. அப்போதைய பா.ஜ.க.வுக்கும், தற்போதைய பா.ஜ.க. வுக்கும் என்ன வேறுபாடு?

அப்போதைய பா.ஜ.க. பாதை மாறியபோதே, திமுகவும் தோழமையை விலக்கிக் கொண்டது.

இடதுசாரிகளுடன் திமுக நட்புசக்தி யாகவே இருந்து வந்திருக்கிறது. ஆனால், அண்மைக்காலமாக இரு தரப்பிலும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளதே?

ஒரு கட்சிக்கு என்ன பெயர் என்ற கவலை இல்லை. தலைமை ஏற்றிருப்போர் யார், நம்மை எப்படி மதிப்பவர் என்று எண்ணிப் பார்க்க வேண்டும் என திமுக பொதுக்குழுவில் சொன்னேன். அந்தக் கருத்து இடதுசாரிகள் - திமுக நட்புக்கு பொருந்தும்படியாக உள்ளது. உறவும் நட்பும் ஒருவழிப் பாதையல்ல.

தேமுதிகவை திமுக நட்பு சக்தியாக்கிக் கொள்ளாமல் போனது ஏன்?

ஒருவருக்கொருவர் சரியாகவும் முழுமையாகவும் புரிந்து கொள்ள முடியாமல் சூழ்நிலை அமைந்ததுதான் காரணம் என்பது என்னுடைய கருத்து.

SCROLL FOR NEXT