தமிழகம்

நிர்ணயித்த இலக்கை தாண்டி தொழில்முனைவோருக்கு ரூ.35 கோடி கடனுதவி: தேசிய சிறுதொழில் கழகம் சாதனை

ப.முரளிதரன்

தேசிய சிறுதொழில் கழகம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட கூடுதலாக குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோருக்கு ரூ.35 கோடி வரை வங்கிக் கடனுதவி பெற்றுத் தந்து கடந்த ஆண்டு சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டில் ரூ.40 கோடி வரை கடனுதவி பெற்றுத்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், தகுதி வாய்ந்த தொழில்முனைவோர் பயன்பெறலாம் என்று அறிவித்துள்ளது.

மத்திய அரசின் ‘மினி ரத்னா’ நிறுவனங்களில் ஒன்று தேசிய சிறுதொழில் கழகம். 1955-ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களைத் தொடங்குவதற்கும், அவற்றின் வளர்ச்சிக்கும் தேவையான உதவிகளை அளித்து வரு கிறது.

கடந்த ஆண்டில் இந்நிறுவனம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட கூடுதலாக தொழில்முனைவோருக்கு வங்கிக் கடனுதவியைப் பெற்றுத் தந்து சாதனை படைத்துள்ளது.

வங்கிக் கடன்

இதுகுறித்து சென்னையில் உள்ள தேசிய சிறுதொழில் கழகத்தின் துணை பொது மேலாளர் ஆர்.சரவணகுமார் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

இன்ஜினீயரிங், ஆட்டோ மொபைல், ஃபேப்ரிகேஷன் போன்ற துறைகளில் புதிதாக தொழில் தொடங்க ஆர்வம் உள்ள தொழில்முனைவோர், ஏற்கெனவே தொழில் தொடங்கிவிட்டு இடை யில் கடனுதவி தேவைப் படுவோர், தொழிலை விரிவாக்கம் செய்ய விரும்பும் தொழில்முனை வோருக்கு வங்கிக் கடன் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை தேசிய சிறுதொழில் கழகம் மேற்கொண்டு வருகிறது.

இதன்படி, கடந்த ஆண்டு 55 சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள் வங்கிக் கடனுதவி பெற விண்ணப்பித்தன. இதில், 45 நிறுவனங்களுக்கு கடன் கிடைத்தது. கடந்த ஆண்டு ரூ.20 கோடி வரை வங்கிக் கடனுதவி பெற்றுத் தர இலக்கு நிர்ணயித்தோம். இலக்கைத் தாண்டி ரூ.35 கோடி வரை கடனுதவி பெற்றுத் தந்தோம்.

இந்த ஆண்டில் ரூ.40 கோடி வரை கடனுதவி பெற்றுத்தர இலக்கு நிர்ணயித்துள்ளோம். கடந்த ஏப்ரல் முதல் தற்போது வரையிலான 3 மாதத்தில் ரூ.1.4 கோடி கடனுதவி வழங்கப் பட்டுள்ளது.

டெண்டரில் பங்கேற்பு

பொதுத்துறை நிறுவனங்கள் வெளியிடும் டெண்டரில் பங்கேற்க வேண்டும் என்றால், முன்காப்புத் தொகை (இஎம்டி) செலுத்த வேண்டும். ஆனால், தேசிய சிறுதொழில் கழகத்தில் பதிவுசெய்து சான்றிதழ் பெற்றால், முன்காப்புத் தொகை செலுத்தாமலேயே சிறு, குறு நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்கலாம்.

மேலும், அவர்கள் ஒரே நேரத்தில் பல நிறுவனங்களின் டெண்டரில் பங்கேற்க இயலும்.

தொழில்முனைவோர்கள் புதிதாக வங்கிகள் மூலம் கடன் பெற்று தொழில் தொடங்க விரும்பினால், வங்கிகளை அணுகி அவர்களுக்கு கடனுதவி பெற்றுத் தருவதோடு, கடனுதவி பெறுவதற்கான திட்ட அறிக் கையை (புராஜெக்ட் ரிப்போர்ட்) தயாரிக்கத் தேவையான ஆலோ சனைகளையும் வழங்குகிறோம்.

எனவே கடனுதவி பெற விரும்பும் தொழில்முனை வோர் சென்னையில் உள்ள தேசிய சிறுதொழில் கழக அலுவலகத்தை 044-28294146, 28294541, 28293347 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT