புத்தூரில் நடந்த வேட்டையில் தீவிரவாதிகள் 'போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் சிக்கினர். தமிழக அரசின் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் தங்கள் உயிரை பணயம் வைத்து, தொடர்ந்து பல நாட்களாக கண் காணித்து தீவிரவாதிகளை கைது செய்தது பற்றி விறுவிறுப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒன்றாக தங்கியிருந்தனர்
இது குறித்து சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, "போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், அபுபக்கர் சித்திக் ஆகியோர் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த மாதம்தான் முக்கிய தகவல்கள் கிடைத்தன. குற்றவாளிகள் நான்கு பேரில் போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில் ஆகிய இரண்டு பேர் மட்டும் ஒன்றாக இருப்பது தெரிந்தது.
தீவிரவாதிகள் இரண்டு பேர் வேலூர்-ஆந்திரா எல்லையில் தலைமறைவாக இருப்பது தெரிந்து அங்கு பல இடங்களில் சோதனை நடத்தினோம். பின்னர் ஆம்பூர் அருகே ஒரு பண்ணை வீட்டில் சந்தேகப்படும்படியாக இரண்டு பேர் வாடகைக்கு இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அவர்களை நள்ளிரவில் சுற்றிவளைத்துப் பிடித்தோம். அவர்கள் நாங்கள் தேடிப்போன தீவிரவாதிகள் இல்லை. அவர்களின் பெயர் நவுஷாத், அமானுல்லா.
இருவரையும் வேலூரிலேயே வைத்து விசாரணை நடத்தினோம். அப்போது அவர்களுக்கும், போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில் ஆகியோருக்கும் நெருங்கியத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. எங்களுக்கு கிடைத்த முதல் துருப்புச் சீட்டே அவர்கள் கொடுத்த தகவல்கள்தான்.
போலீஸ் பக்ருதீன் ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்குள் வந்து இருவரையும் அடிக்கடி சந்தித்திருக் கிறார். தனக்கும், தனது கூட்டாளிக ளுக்கும் தேவையான பொருட்களை ஒரு துண்டுச் சீட்டில் எழுதி இவர் களிடம் கொடுத்துவிட்டு சென்று விடுவார் போலீஸ் பக்ருதீன். இவர்கள் அதை வாங்கி வைத்திருப்பார்கள். அடுத்தமுறை வரும்போது அந்த பொருட்களை பக்ருதீன் எடுத்துச் கொண்டு சென்று விடுவார்.
"போலீஸ்" பக்ருதீன் உட்பட மூன்று பேரின் புகைப்படங்களையும் தமிழகம் முழுவதும் ஒட்டி, ரூ.20 லட்சம் பரிசுத் தொகை அறிவித்ததால் அவர்கள் நகருக்குள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. இதனால் நகருக்குள் வந்து வாங்க வேண்டிய பொருட்களை இவர்கள் மூலம் வாங்கி இருக்கின்றனர்.
கடைசியாக மூன்று வாரங்களுக்கு முன்பு ஒரு மருந்துப் பட்டியலைக் கொடுத்து அவற்றை வாங்கி வரச்செய்துள்ளார். அதை 2 வாரங்களுக்கு முன்பு நேரில் வந்து வாங்கி சென்றிருக்கிறார் பக்ருதீன்.
நெல்லையிலும் தொடர்பு
இவர்கள் இருவரையும் போகிற போக்கில் சாதாரணமாக பிடித்து விசாரித்த நிலையில், இத்தனை தகவல்களையும் போலீசார் கறந் துள்ளனர்.
நவுஷாத், அமானுல்லா இருவரிடமும் இருந்த செல்போனில் பதிவாகி இருந்த பக்ருதீனின் எண்ணை வைத்துதான் அவர்கள் இருப்பிடத்தை கண்டுபிடித்தோம்.
திருநெல்வேலியில் உள்ள ஒருவரிடம் பக்ருதீன் செல்போனில் பேசியிருக்கிறார். அந்த எண்ணும், வேலூரில் பிடிபட்டவர்களிடம் இருந்த எண்ணும் ஒன்றாக இருந்தது. அதை வைத்துதான் பேசியது பக்ருதீன் என்பதை உறுதி செய்தோம்," என்றனர்.
தப்பிய உறவினர்
புத்தூரில் 3 தீவிரவாதிகளும் மேதார் தெருவில் ஒரு வீட்டையும், மசூதி தெருவில் ஒரு வீட்டையும் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். மேதர் தெருவில் "போலீஸ்" பக்ருதீனும், அவரது உறவினர் ஜாபர் என்பவரும் தங்கியிருந்தனர். மசூதி தெரு வீட்டில் பிலால் மாலிக் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கியிருந்தார். பன்னா இஸ்மாயில் இரு வீட்டிலும் மாறி மாறி தங்கியிருக்கிறார்.
இந்த வேட்டையில் பிலால் மாலிக் இருந்த வீட்டை மட்டுமே காவல் துறையினர் முதலில் முற்றுகையிட்டனர். இதை அறிந்த ஜாபர் காவல் துறை வருவதற்கு சில நிமிடங்களுங்கு முன்பு அங்கிருந்து தப்பித்துச் சென்று விட்டதாக தகவல் கசிந்துள்ளது.