தமிழகம்

தாம்பரம் அருகே திருவஞ்சேரியில் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

செய்திப்பிரிவு

தாம்பரம் அருகே திருவஞ்சேரியில் 500 ஆண்டுகள் பழமையான  செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தாம்பரம் அருகே திருவஞ்சேரி கிராமத்தில்  செல்வ விநாயகர்,  கோதண்டராம சுவாமி மற்றும் வேணுகோபால சுவாமி திருக்கோயில் உள்ளது . கடந்த சில ஆண்டுகளாக சிதிலமடைந்து காணப்பட்ட இக்கோயிலில் கிராம மக்களும், கோயில் நிர்வாகிகளும் இணைந்து புனரமைப்பு பணி மேற்கொண்டனர். இதற்கான பணிகள் அண்மையில் நிறைவடைந்தது. அதை தொடர்ந்து கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

முன்னதாக, கடந்த 2 நாட்களாக கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, சுமங்கலி பூஜை, முதல் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, நேற்று காலை புனித நீர் கொண்டு வரப்பட்டு கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். கோயில் தர்மகர்த்தா டி.வி.நந்தகோபால் மற்றும் கோதண்டராமசாமி சமய அறக்கட்டளை சார்பில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கோயில் வரலாறு

இந்த கோயில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்திய விமானப்படை தளத்துக்காக 1942-ல் நிலம் கையகப்படுத்தப்பட்டபோது கோயில் இடம் மாற்றப்பட்டது. இதன் பின்னர் செல்வ விநாயகர் சிலை திருடப்பட்டது. அதனால் கிராமத்தில் கொடிய வறுமை நிலவியது. அப்போது கிராம மக்கள் செய்த வழிபாட்டால் பக்தர் ஒருவர் கனவில் விநாயகர் தோன்றி மயிலாப்பூரில் தான் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார். சிலையை திருடிய திருடனுக்கு கண்பார்வை போனது.

போலீஸாரால் கைது செய்யப்பட்ட திருடன் சிலையை திருடியதாகவும், அதனால் கண்பார்வை பறிபோனதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தான்.

இதனையடுத்து சிலை மீட்கப்பட்டு, திருவஞ்சேரி கிராமத்துக்கு மீண்டும் விநாயகர் சிலை கொண்டுவரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று கும்பாபிஷேகமும் நடை பெற்றது.

SCROLL FOR NEXT