காவிரி பிரச்சினையில் தமிழகம், கர்நாடகத்தில் சிலர் மோசமான அரசியல் நடத்தி வருவதாக சிஐடியு அகில இந்திய பொதுச்செயலாளர் தபன்சென் வேதனை தெரிவித்தார்.
இதுகுறித்து தூத்துக்குடியில் அவர் கூறியதாவது: நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. துறைமுகங்களை தனியார் மய மாக்கும் முயற்சியாக, இந்திய பெரும் துறைமுக சட்டத்தைத் திருத்தி புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
குளச்சல் அருகே இனயத்தில் அமையும் புதிய துறைமுகத்துக்காக தூத்துக்குடி, சென்னை, எண்ணூர் துறைமுக நிதி பயன்படுத்தப் படுகிறது. அதாவது இந்தத் துறை முகங்களிடம் இருந்து ரூ.1,500 கோடி நிதி பெறப்படுகிறது. தனியார் ரூ.200 கோடி முதலீடு செய்கின்றனர். இது பொதுத்துறை நிறுவனங்களை அழிக்கும் செயலாகும்.
கடந்த 3 ஆண்டுகளில் புதிதாக எந்த வேலைவாய்ப்பும் உருவாக் கப்படவில்லை. ஏற்கெனவே இருக் கும் வேலைவாய்ப்புகளும் குறைந்து வருகின்றன. வளர்ச்சி என்ற பெயரில் அந்நிய முதலீட்டை தடையின்றி திறந்துவிட்டுள்ளனர். புதிய நிறுவனங்களை ஏற் படுத்த அந்நிய முதலீடுகள் வரவில்லை. ஏற்கெனவே உள்ள நிறுவனங்களின் பங்குகளைத்தான் வெளிநாட்டினர் வாங்குகின்றனர். நாளடைவில் இந்த நிறுவனங்கள் வெளிநாட்டினர் வசம் போய்விடும்.
காவிரி பிரச்சினையில் நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்த இரு மாநில அரசுகளும் பேசி தீர்வு காண வேண்டும். இந்த பிரச்சினையில் இரு மாநிலங்களிலும் சிலர் மோச மான அரசியல் நடத்தி வருகின்றனர் என்றார்.
சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன், பொதுச்செய லாளர் ஜி.சுகுமாரன், நீர்வழி போக்குவரத்து ஊழியர் சம்மேளன அகில இந்திய செயலர் நரேந்திரராவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.