பாளையங்கோட்டையில் கண்ணீரை வரவழைக்கும் வகையில், திருவள்ளுவர் சிலையொன்று உருத்தெரியாமல் சிதிலமடைந்து காணப்படுகிறது. ஹரித்வார் சம்பவத்துக்கு கலங்குவோர், தமிழகத்தில் இதுபோன்று கவனிப்பின்றி காட்சியளிக்கும் திருவள்ளுவர் சிலைகளை சீரமைக்க முன்வருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் திருவள்ளுவரின் சிலையை நிறுவுவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. இச் சிலையை நிறுவுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் வரிந்துகட்டிக்கொண்டு அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள். அச்சிலையை நிறுவாமல் இருப்பது தமிழருக்கு நேர்ந்த அவமானமாக கூறுகின்றனர். சமூகவலைதளங்களிலும் இது குறித்த கருத்துகள் காரசாரமாக பதிவிடப்பட்டு வருகின்றன.
ஆனால், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திருவள்ளுவர் சிலைகள் கவனிப்பாரின்றி சிதிலமடைவது குறித்து எவரும் கவலைப்படாததுதான் ஆச்சரியப்பட வைக்கிறது. அரசு பேருந்துகளில் திருவள்ளுவரின் உருவப்படத்துடன், ஏதாவது ஒரு குறளையும், அதற்கான விளக்கத்தையும் பயணிகள் பார்வையில்படுமாறு எழுதி வைப்பது வழக்கொழிந்து வருகிறது.
கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் பாறைக்கு நடுவே மிக பிரம்மாண்டமாய் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை, கடல் காற்றாலும், நீர் திவலைகளாலும் பொலிவிழக் கிறது. அதற்கு பராமரிப்பு பணிகளை குறிப்பிட்ட இடைவெளியில் ஆட்சியாளர்கள் மேற்கொள்வதில்லை. இச்சிலையை பராமரிக்க கோரி சமீபத்தில்தான் எதிர்க் கட்சிகளும், தமிழ் ஆர்வலர்களும் நாகர்கோவிலில் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
சிலை சேதம்
பாளையங்கோட்டையில் பழமையான நூற்றாண்டு மண்டபம் எதிரே திருவள்ளுவர் பெயரிலான சிறுவர் நூலகத்தின் மேல்பகுதியில் தற்போது சிதிலமடைந்து காணப்படும் திருவள்ளுவர் சிலையை பார்த்தால் கண்ணீர்தான் வரும். அந்த அளவுக்கு அச்சிலையில் கைகள் உடைந்தும், முகம் சிதைந்தும் இருக்கிறது. நூலகம் பாழடைந்து, கழிப்பிடமாக மாற்றப்பட்டிருக்கிறது.
பாளையங்கோட்டை நகர்மன்றமாக இருந்தபோது 23.11.1966-ம் தேதி இந்த நூலகத்தையும், சிலையையும் அப்போதைய மாவட்ட ஆட்சியர் எம்.எம்.ராஜேந்திரன் திறந்து வைத்திருக்கிறார். அப்போது நகர்மன்றத் தலைவராக எம்.எஸ்.மகாராஜபிள்ளை இருந்தார்.
பாழடைந்துள்ள இந்த நூலக கட்டிடத்தையும், அதன்மீது அலங்கோலமாக இருக்கும் திருவள்ளுவர் சிலையையும் புனரமைத்து, நூலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அல்லது அவற்றை அகற்ற வேண்டும். இதை வலியுறுத்தி, கடந்த ஜனவரி மாதம் திருவள்ளுவர் தினத்தன்று, தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தன. அதையெல்லாம் தற்போதைய திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகமோ, மாவட்ட நிர்வாகமோ கவனத்தில் கொள்ளவில்லை.
எழுத்தாளர் நாறும் பூநாதன் கூறும்போது, `பாளையங் கோட்டையில் சிதிலமடைந்து கொண்டிருக்கும் திருவள்ளுவர் சிலையை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த ஆண்டு திருவள்ளுவர் தினத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி மாநகராட்சிக்கு அனுப்பியிருக்கிறது. சிலையை சீரமைத்து நூலகத்தை செயல்படுத்த வேண்டும். இல்லையேல் சிலையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்’ என்றார் அவர்.