தமிழகம்

ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க முத்தரப்பு கமிட்டி அமைக்கப்படுவது எப்போது?

கி.ஜெயப்பிரகாஷ்

தமிழக அரசு ஆட்டோவுக்கு கட்டணம் நிர்ணயித்து 4 மாதங்கள் ஆகின்றன. ஆனால், அதற்குள் காஸ் விலை ரூ.12, பெட்ரோல் விலை ரூ.4, டீசல் விலை ரூ.2.50 விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஆட்டோ தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் விலைக்கு ஏற்றவாறு கட்டணத்தை மாற்றியமைக்கும் வகையில் முத்தரப்பு கமிட்டி அமைக்க வேண்டுமென ஆட்டோ தொழிலாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

சென்னையில் ஓடும் 72,000 ஆட்டோக்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி குறைந்தபட்ச கட்டணம் ரூ.25, கூடுதலாக ஒரு கி.மீ.க்கு ரூ.12 செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. புதிய ஆட்டோ கட்டணம் உடனடியாக அமலுக்கு வந்தது.

இதையடுத்து, காலக்கெடு கொடுத்து புதிய கட்டணத்திற்கு மீட்டர் திருத்தியமைக்கப்பட்டது. பின்னர், அதிக கட்டணம் வசூ லிக்கும் ஆட்டோக்கள் மீது நட வடிக்கை எடுக்க போக்குவரத்துத் துறை மற்றும் போக்குவரத்து போலீஸ் இணைந்து பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்றவாறு ஆட்டோ கட்டணத்தை மாற்றி யமைக்க அரசு அதிகாரிகள், ஆட்டோ தொழிற்சங்கம், நுகர் வோர் அமைப்பு கொண்ட முத்தரப்பு கமிட்டி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முற் போக்கு நுகர்வோர் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் தி.சடகோபன் கூறுகையில், “தமிழகத்தில் சுமார் 22 ஆண்டுகளாக ஆட்டோக்க ளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப் படாமல் பேரம் பேசித்தான் ஓட்டி வந்தனர். இந்நிலையில், தமிழக அரசு சமீபத்தில் ஆட்டோக்களுக்கு கட்டணத்தை நிர்ணயித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

முன்பெல்லாம் எரிபொருள் விலை நிலையாக இருந்தது. ஆனால், இப்போது, மாதந்தோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. எனவே, எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்றவாறு கட்டணத்தை மாற்றியமைக்க தமிழக அரசு முத்தரப்பு கமிட்டியை அமைக்க வேண்டும். இதன் மூலம் கட்டண நிர்ணயம் மட்டுமல்லாமல், ஆட்டோ தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் சுமூகமாக தீர்வு காண முடியும்” என்றார்.

தமிழ்நாடு ஆட்டோ ஓட்டுநர் சம்மேளன (ஏஐடியுசி) பொது செயலாளர் சேஷசாயன் கூறுகை யில், ‘‘தமிழக அரசு ஆட்டோவுக்கு கட்டணம் நிர்ணயித்து 4 மாதங்கள் ஆகின்றன. ஆனால், அதற்குள் காஸ் விலை ரூ.12, பெட்ரோல் விலை ரூ.4, டீசல் விலை ரூ.2.50 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை ஆட்டோ தொழிலாளி எப்படி சமாளிக்க முடியும்?. எனவே, பெட்ரோல், டீசல், காஸ் விலையை குறைக்க வேண்டும், ஆட்டோக்கள் மீதான போலீஸ் கெடுபிடியை நிறுத்த வேண்டும், முத்தரப்பு கமிட்டி அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 8-ம் தேதி அனைத்து ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளோம்’’ என்றார்.

இது குறித்து சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிலாளர் சங்க வடசென்னை மாவட்ட செயலாளர் ஏ.எல். மனோகரன் கூறும் போது, ‘‘டீசல், பெட்ரோல் விலை உயரும்போதெல்லாம் கட்டணத்தை மாற்றியமைக்கும் வகையில் ஆந்திரம், கேரளம், கர்நாடக மாநிலங்களில் முத்தரப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, தமிழகத்தில் விரைவில் முத்தரப்பு கமிட்டியை அமைக்க வேண்டும். சமீபத்தில் நடத்தப்பட்ட போராட்டத்தில் இந்த கோரிக்கையும் வலியுறுத்தப் பட்டது’’ என்றார்.

SCROLL FOR NEXT