தமிழகம்

தமிழக வறட்சி விவரங்களை மத்திய குழுவுக்கு அளித்து விரைவில் நிதி பெறுக: முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை

செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள விவசாய பாதிப்புகள், குடிநீர் பஞ்சம், வறட்சி தொடர்பான முழு விவரங்களை மத்திய குழுவிற்கு அளித்து உரிய நிதியை விரைவில் பெற வேண்டிய மிகப் பெரிய கடமை முதல்வருக்கு உள்ளது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், ''வடகிழக்கு பருவ மழை பொய்த்துப் போனதாலும், காவிரி இறுதி தீர்ப்பின் படி கர்நாடக மாநிலத்திடமிருந்து தண்ணீர் பெற முடியாத அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டாலும், இன்றைக்கு வரலாறு காணாத வறட்சி தமிழக விவசாயிகளை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழகமெங்கும் மக்கள் குடிநீருக்கு தவித்துக் கொண்டிருக்கிறார்கள். சென்னை மாநகரமே கடும் குடிநீர் பஞ்சத்தில் சிக்கிக் கொள்ளும் அபாயத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைப் பார்வையிட வந்துள்ள மத்தியக் குழு, எங்களின் குறைகளை முழுமையாக கேட்டறியவில்லை என்று விவசாயிகள் கண்ணீர் மல்க குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். விவசாய சங்கங்களும் இதேபோன்ற குற்றச்சாட்டுகளை வைத்திருப்பது கவலையளிக்கிறது.

அதிமுக அரசும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்புகள் குறித்த முழு விவரங்களையும் மத்திய குழுவினருக்கு அளிக்கவில்லை. உதாரணத்திற்கு 225 விவசாயிகளுக்கு மேல் தங்கள் வாழ்வாதாரம் தொலைந்து போனதால் தற்கொலை செய்தும், அதிர்ச்சியாலும் மரணமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் 17 விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மத்தியக் குழுவிடம் அதிமுக அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கின்றது.

ஏற்கெனவே காவிரி நீர் தேவை பற்றி விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுப்பிய குழு டெல்டா மாவட்டங்களுக்கு வந்தது. அந்த குழுவிடம் உண்மைத் தகவல்களை அளிக்காமல், விவசாயிகள் தற்கொலையை அதிமுக அரசு மறைத்ததன் விளைவாகவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாமல் தடைபட்டு நிற்கிறது. இந்த சூழ்நிலையில் இப்போது வறட்சி நிலையை பார்வையிட வந்துள்ள மத்திய குழுவிடமும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த முழு தகவல்களை அளிக்காத அதிமுக அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது.

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், விவசாய சங்கங்களும் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்தும், அதிமுக அரசு மவுனம் காத்தது. பிறகு ஒரு வழியாக கடந்த 10.1.2017 அன்றுதான் தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.

39 ஆயிரத்து 565 கோடி ரூபாய் வறட்சி நிவாரண நிதி வேண்டும் என்ற கோரிக்கையுடன், 16.1.2017 அன்று பிரதமருக்கு கடிதமும் கொடுத்தார். இந்நிலையில் இப்போது தமிழகத்தின் வறட்சி நிலையை ஆய்வு செய்ய மத்திய குழு வந்திருக்கிறது. விவசாயம் பாதிப்பு, குடிநீர் பஞ்சம், மாநிலம் முழுவதும் நிலவும் வறட்சி உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அந்தக் குழுவிற்கு முறையாக வழங்க வேண்டும்.

ஏற்கெனவே நெற்பயிர் பயிரிட்ட ஏக்கர் ஒன்றுக்கு 5,465 ரூபாய் மட்டுமே விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்க முடியும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்பை விவசாயிகள் ஏற்கவில்லை. அந்த தொகை போதாது, ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இதுவரை விவசாயிகளின் பயிர் இழப்பீடுகளுக்கான காப்பீட்டுத் தொகையும் கிடைக்கவில்லை. விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடன்களும் தள்ளுபடி செய்யவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், மத்திய குழுவிற்கு சரியான தகவல்களை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்து வறட்சி தொடர்பாக மத்திய அரசிடம் உரிய நிதியை, விரைவில் பெற வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நினைவூட்ட கடமைப்பட்டுள்ளேன்.

ஏனென்றால் இதற்கு முன்பு வார்தா புயல் பாதிப்புகளால் 22 ஆயிரத்து 573 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டி, இடைக்கால நிதியாக மத்திய அரசிடம் கேட்ட 1000 கோடி ரூபாய் நிதியே இன்னும் வரவில்லை.

இப்படியொரு நிலையில், இப்போது ஆய்வு செய்ய வந்துள்ள மத்திய குழுவுக்கு போதிய தகவல்களை அளித்து, தமிழக அரசு இதுவரை கோரியுள்ள முழு நிதியையும் பெற வேண்டும். பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கவும், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கவும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களையும் மற்றும் தற்போது நிலுவையில் உள்ள கூட்டுறவு பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்து, பெரும் பாதிப்பில் தவித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளை மீட்டு, அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT