கச்சத்தீவில் இந்தியா-இலங்கை இரு நாட்டு பக்தர்கள் கொண்டாடும் புனித அந்தோனியார் திருவிழா சனிக்கிழமை மாலை துவங்கியது.
இந்தியா–இலங்கை இரு நாட்டு மக்கள் இணைந்து கொண்டாடும் புனித கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா மாலை 4 மணியளவில் கச்சத்தீவில் துவங்கியது. கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவை யாழ்ப்பாணம் மறைமாவட்ட பேராயர் அருட்திரு. சவுந்திரநாயகம் அந்தோணியார் கச்சத்தீவு ஆலயத்தின் கொடியை ஏற்றி திருவிழாவை துவங்கி வைத்தார்.
முன்னதாக கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவில் தமிழகத்திலிருந்து பங்கேற்பதற்காக 3,460 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் 3,432 பேர்களுக்கு மட்டுமே அனுமதி கிடைத்தது. சனிக்கிழமை அதிகாலையிலிருந்தே கச்சத்தீவு செல்ல ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் தமிழக பக்தர்கள் குவிந்தனர்.
கச்சத்தீவு செல்ல விண்ணப்பித்திவர்களுக்கு வருவாய்துறையின் மூலம் சிறப்பு அடையாள அட்டைகள் மார்ச் 12 அன்றே வழங்கப்பட்டுவிட்டன. அடையாள அட்டைகளை பரிசோதித்து விட்டு மீன்வளத்துறையின் சார்பாக கடல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கச்சத்தீவு செல்லும் ஒவ்வொருவருக்கும் ‘‘லைப் ஜாக்கெட்’’ வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து சோதனைச் சாவடிகளில் உடமைகள் சோதனை செய்யப்பட்டு 96 விசைப்படகுகளில் பயணிகள் கச்சத்தீவு புறப்பட்டுச் சென்றனர்.
கச்சத்தீவு செல்லும் இந்திய யாத்ரீகர்களின் பாதுகாப்பிற்காக 20 பேர் கொண்ட தனிப்படை கடலோர காவல் குழுமம் படை, 6 கடலோர காவல் படை படகுகள் ஆகியவை இந்தியாவின் சார்பில் ஈடுபடுத்தப்பட்டது. மேலும் இலங்கை கடற்படையின் கப்பல்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் சிறப்பு திருப்பலி பூஜையும், அந்தோணியார் தேர்பவனியும் நடைபெறுகிறது. இதனை ராமேஸ்வரம் வேர்க்கொடு அருட்தந்தை சகாயராஜ் தலைமையில் நடைபெறும். அதனை தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெற்று விழா முடிவடையும்.