திருச்செந்தூரில் மாணவர் களுக்கு போதை ஊசி போட்டதாக, 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்செந்தூர் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிலர் போதை ஊசி போடுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. திருச்செந்தூர் கோயில் போலீஸ் நிலைய ஆய்வாளர் பெரி.லெட்சுமணன் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் மாலையில், அதே ஊர் வீரராகவபுரம் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் இசக்கிமுத்து என்பவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
3 பேர் கைது
அங்கு வைத்திருந்த போதை மருந்து பாட்டில்கள், 124 சிரிஞ்சுகள், 820 ஊசிகளை பறிமுதல் செய்தனர். இசக்கி முத்துவை (36) பிடித்து விசா ரித்தனர். அவர், வீரமாகாளி யம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் மணி கண்டன் (22), மெஞ்ஞானபுரம் சத்யா நகரைச் சேர்ந்த புஷ்பராஜ் செல்வம் (36) ஆகியோருடன் சேர்ந்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதை ஊசி போடுவதை தொழிலாக செய்து வந்தது தெரிய வந்தது. மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.
ரூ.200-க்கு போதை ஊசி
வயிற்று வலி, உடல் வலி இருப்பதாகக் கூறி மருந்துக் கடைகளில் இருந்து இசக்கிமுத்து வலி நிவாரணி மருந்துகளை வாங்கி வீட்டில் சேமித்து வைத்துள்ளார். அவரிடம், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை அழைத்து வரும் பணியை மணிகண்டன், புஷ்பராஜ் ஆகியோர் செய்துள்ளனர். ஊசி போட ரூ.200 வசூலித்துள்ளனர்.
மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் இவர்களுக்கு அளவுக்கு அதிகமாக வலி நிவாரணி மருந்துகள், சிரிஞ்சுகள் போன்றவை எப்படிக் கிடைத்தன என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.