ஜெயலலிதா மறைவால் மனஉளைச்சல் ஏற்பட்டதால் ராஜினாமா கடிதத்துடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு வந்த காவல் உதவி ஆய்வாளரிடம் போலீஸ் அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். நேற்று காலை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பார்க்க வந்திருப்பதாக கூறினார். அங்கிருந்த போலீஸார் அவரிடம் விவரம் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:
எனது பெயர் உமாபதி (52). குரோம்பேட்டை போக்குவரத்து காவல் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருக்கிறேன். ஜெயலலிதா இறந்ததில் இருந்து அதிக மனஉளைச் சலில் இருப்பதால் பணியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருக்கிறேன்.
ராஜினாமா கடிதத்தை கொடுக்க காவல் ஆணையர் அலுவலகத்துக்குச் சென்றேன். அவர் அங்கு இல்லாததால், முதல்வரிடமே கொடுத்து விடலாம் என்று வந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அங்கு பாதுகாப்புக்கு நின்றி ருந்த போலீஸார் உமாபதியை அழைத்துச் சென்றனர். அவரிடம் மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தி வருகிறார். உமாபதி திருநீர்மலையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு ஒரு மனைவி, ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.