தமிழகத் தலைவர்களை சந்திக்க நேரம் ஒதுக்குவதில் மட்டும் பாரபட்சம் காட்டப்படுவதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. சிங்காரம் குற்றச்சாட்டியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி கேட்டு டெல்லியில் முகாமிட்டுள்ள அவர், தனக்கு சோனியா, ராகுலை சந்திக்க அனுமதிக்காவிட்டால் மறியலில் ஈடுபடப்போவதாகக் கூறியுள்ளார்.
தமிழகக் காங்கிரஸ் தலைவராக தன்னை நியமிக்க வேண்டும் எனக் கேட்டு கடந்த 5-ம் தேதி சிங்காரம் டெல்லி வந்தார். அவருடன் ஏற்காடு தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவான பி.ஆர்.திருஞானமும் வந்துள்ளார்.
தான் தமிழக காங்கிரஸ் தலைவராக தமிழகத்தின் தஞ்சாவூர், திருச்சி, சேலம், கோவை, சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு உட்படப் பல மாவட்டங்களில் ஆதரவு இருப்பதாகவும், இதை குறிப்பிட்டு அங்கிருந்து ஐம்பதிற்கும் மேற்பட்ட பேக்ஸ் கோரிக்கை ராகுலுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் சிங்காரம் கூறுகிறார்.
இதுவன்றி, தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏக்களான டாக்டர்.எஸ்.எஸ்.ராமதாஸ், வி.ராஜேஷ்வரன், ஜி.ஜானகிராமன், ஆர்.சுந்தரமூர்த்தி, ஆண்டிமடம் ஆர்.தங்கராஜ் மற்றும் ஜி.லோகாம்பாள் உபட 25 பேர் ஆதரவு கடிதம் அளித்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
இதை ராகுல் மற்றும் சோனியாவிடம் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டி நேரம் ஒதுக்கும்படி வலியுறுத்தி வருகிறார் சிங்காரம். இதற்கு அவ்விரு தலைவர்கள் அலுவலகங்களிலும் வாய்ப்பளிக்காமல் காலம் தாழ்த்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனால், கடும் கோபத்திற்கு உள்ளான சிங்காரம், உடனடியாக தலைவர்களை சந்திக்க நேரம் ஒதுக்காவிட்டால் தலைமை அலுவலகம் முன் மறியல் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை ‘தி இந்து’விடம் பேசிய சிங்காரம், "வட மாநிலங்களின் எந்த தலைவர்கள் வந்தாலும் உடனடியாக தலைவர் ராகுலை சந்திக்க முடிகிறது. கேரளாவில் இருந்து வரும் கடைநிலைத் தொண்டர்கள்கூட எனது கண்முன்னால் அவரை சந்தித்து செல்கின்றனர்.
ஆனால், என் போல் தமிழகத் தலைவர்களை சந்திக்க நேரம் ஒதுக்குவதில் மட்டும் பாரபட்சம் காட்டப்படுகிறது.
இருவரையும் சந்தித்து தமிழக காங்கிரஸ் நிலைமையை எடுத்துக் கூறி முதன்முறையாக கட்சி ஊழியரான என்னை தலைவராக அமர்த்த வேண்டும் என வலியுறுத்த உள்ளேன்.
இதற்கு வாய்ப்பு அளிக்காவிட்டால் டெல்லியின் தேசிய தலைமை அலுவலகம் முன் மறியல் நடத்துவேன்" எனத் தெரிவித்தார்.
யார் இந்த சிங்காரம்?
கடந்த 1989 மற்றும் 1991 சட்டப்பேரவை தேர்தல்களில் பேராவூரணி தொகுதியின் எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர் சிங்காரம்.
இவர், ஜி.கே.மூப்பனார் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோர் தலைமையில் பலரும் கட்சியை விட்டு வெளியேறிய போது காங்கிரஸிலேயே தங்கி இருந்தவர். ஆனால், காங்கிரஸில் இருந்தபடி அதிமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டதாக சிங்காரம் மீது புகார் உள்ளது.
தமிழகக் காங்கிரஸ் தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நீக்கப்பட்ட பின் அப்பதவியை பெற பலரும் முயற்சிக்கின்றனர். இந்த பட்டியலில் பீட்டர் அல்போன்ஸ், சுதர்ஸன நாச்சியப்பன், ஹெச்.வசந்தகுமார், கராத்தே தியாகராஜன், டாக்டர்.செல்லகுமார் ஆகியோர் அல்லது அவர்களின் ஆதரவாளர்கள் டெல்லியில் முகாம் இட்டு ராகுல் மற்றும் சோனியாவை சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர்.