மெரினாவில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு விளக்கம் கேட்டு, தமிழக தலை மைச் செயலாளர், காவல் துறை இயக்குநர், சென்னை காவல் ஆணையர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை யில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். நேற்று முன்தினம் அவர் களை கலைக்க முயன்றபோது போலீஸாருக்கும், போராட்டக்காரர் களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
போலீஸாரின் தடியடி சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு தமிழக தலைமைச் செயலாளர், காவல் துறை இயக்குநர், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
ஜல்லிக்கட்டு போராட்டக்காரர் கள் மீது போலீஸார் தடியடி நடத்திய சம்பவம் குறித்து பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் தானே முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. தடியடி சம்பவத்தின்போது போலீ ஸாரே ஆட்டோக்கள், குடிசையை தீ வைத்து எரிப்பது, வாகனங் களை அடித்து சேதப்படுத்துவது, வீட்டுக்குள் புகுந்து தாக்குவது போன்ற காட்சிகள் வெளிவந்துள் ளன. இந்த சம்பவங்கள் குறித்து தமிழக தலைமைச் செயலாளர், காவல் துறை இயக்குநர், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆகியோர் விசாரணை நடத்தி 2 வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை
இளைஞர்கள் போராட்டம் நடந்த மெரினா கடற்கரை, வன் முறையாளர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட ஐஸ்அவுஸ் காவல் நிலையம் ஆகிய இடங்களை தமிழ்நாடு மனித உரிமை ஆணையக் குழுவினர் நேற்று காலையில் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, தமிழ்நாடு மனித உரிமை ஆணையக் குழு நீதிபதி மஞ்சுளா கூறும்போது, ‘‘தடியடி நடத்தப்பட்டது குறித்து யார் வேண்டுமானாலும் எங்களிடம் புகார் தெரிவிக்கலாம். இந்த சம்பவம் குறித்து நாங்கள் விசாரணை நடத்த இருக்கிறோம்’’ என்றார். தடியடி சம்பவம் குறித்து 4 வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல் துறை இயக்குநருக்கும் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.