தமிழகம்

தேர்தலில் பலமுனைப் போட்டி தமிழகத்துக்கு வளர்ச்சியைக் கொடுக்கும்: பிரேமலதா விஜயகாந்த்

செய்திப்பிரிவு

தேர்தலில் பலமுனைப் போட்டி தமிழ்நாட்டுக்கு வளர்ச்சியைக் கொடுக்கும் என தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக, விஜயகாந்த் அணி என பலமுனைப் போட்டி நிலவும் நிலையில் பிரேமலதா இவ்வாறு கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், "மக்கள் ஆதரவோடு 2016ல் ஆட்சி அமைப்போம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மூத்த தலைவர் கருணாநிதி தொடர்ச்சியாக தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்தார். அதற்கு இந்த தருணத்தில் மீண்டும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நிச்சயம் வெற்றி பெறும்:

ஆனால் இப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முடிவின்படி மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்து 'விஜயகாந்த் அணி' என்ற பெயரில் இந்த தேர்தலை சந்திக்கிறோம். இந்தக் கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும்.

பேச்சுவார்த்தை நடைபெறவில்லை:

எந்த ஒரு இடத்திலும் அதிகாரப்பூர்வமாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. கருணாநிதி மற்றும் ஸ்டாலின் இருவேறு கருத்துக்கள் கூறுகிறார்கள். இதற்கான விளக்கத்தை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். கூட்டணிக்கு அழைத்தோம், ஆனால் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று ஸ்டாலினே சொல்லியிருக்கிறார்.

மக்களின் எதிர்பார்ப்பு:

கடந்த 50 ஆண்டுகளாக திமுக, அதிமுக இரண்டு ஆட்சியைத் தவிர வேறு எந்தொரு ஆட்சியுமே வரலை என்று அனைவருக்குமே தெரியும். ஆனால் இவ்விரண்டு கட்சிகளால் தமிழகத்துக்கு எந்த ஒரு முன்னேற்றமுமே இல்லை. அதனால் தான் தமிழக மக்கள் ஒரு மாற்றம் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அந்த எண்ணத்தில் தான் தேமுதிக ஒரு புதிய அணியை அமைத்திருக்கிறது.

அனைத்து தரப்புமே கேப்டனை அழைத்துக் கொண்டிருந்தார்கள். அதற்காக தனித்துப் போட்டி என்று விஜயகாந்த் சொன்னார்கள். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக யாராக இருந்தாலும் கேப்டனோடு வந்து பேசலாம் என்று சொல்லியிருந்தோம். எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

ஊழலுக்கு எதிரானது பாண்டவர் அணி

லஞ்சம், ஊழல் இல்லாத கட்சிகளால் பாண்டவர் அணி உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சி கொண்டு வருவோம்.

பாஜகவுடன் மன வருத்தம் இல்லை

பிரகாஷ் ஜவடேகர் மரியாதை நிமித்தமாக மட்டுமே விஜயகாந்த்தை சந்தித்தார். தற்போது வரை தேமுதிக - பாஜக இரண்டு கட்சிகளுக்கும் எந்தவொரு மனவருத்தமும் கிடையாது. ஆனால், தற்போது அமைந்திருக்கும் கூட்டணிக்கு பாஜகவால் வரமுடியாது ஏனென்றால் கம்யூனிஸ்ட் இருப்பதால் அவர்களுக்கு ஒத்துவராது. அதனால் மட்டுமே பாஜக வரவில்லையே தவிர, வேறு எந்தவொரு காரணமும் கிடையாது.

பலமுனைப் போட்டி நல்லது:

இந்த தேர்தலில் பலமுனைப் போட்டி வரவேற்கத்தக்க ஒன்று. ஏனென்றால் திமுக நல்லாட்சி செய்கிறதோ இல்லையோ, அதிமுகவிற்கு வாக்களித்துக் கொண்டிருந்தார்கள். அதிமுக நல்லாட்சி செய்கிறதோ இல்லையோ, திமுகவிற்கு வாக்களித்துக் கொண்டிருந்தார்கள்.

விஜயகாந்த் என்றைக்கு கட்சி ஆரம்பித்தாரோ, அன்று முதல் மாற்றுச் சக்தியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இந்த முறை மாபெரும் கூட்டணி அமைத்திருக்கிறோம். இந்த பலமுனைப் போட்டி தமிழ்நாட்டுக்கு வளர்ச்சியைக் கொடுக்கும்" என்றார்.

SCROLL FOR NEXT