மூன்றாம் பாலினம் எனப்படும் திருநங்கைகள் குறித்து, பலருக்கும் பலவிதமாகவே எண்ணத் தோன்றுகின்றன. ஆனால் திருநங்கைகள் பண்டைய இந்தியாவில் அரண்மனை காவலர்கள், படைவீரர்கள் என்ற நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர். இவர்களுக்கு எல்லா வகை திறமைகளும் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.
இந்நிலையில் சமுதாயத்தில் சொற்ப அளவிலேயே திருநங்கைகளுக்கு வாய்ப்புகள் அமைகின்றன. பெரும்பாலானோருக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாததால் செல்லும் பாதை தெரியாமல் திக்குமுக்காடி தினந்தோறும் கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வணிக நிறுவனங்களிலும், போக்குவரத்து சிக்னல்களிலும் கை தட்டி காசு கேட்பவர்கள் என்றொரு முத்திரையும் திருநங்கைகளுக்கு குத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் ஒரு சில திருநங்கைகள் செய்யும் தவறான செயல்களால் மூன்றாம் பாலினத்தவருக்கு தீராத அவப்பெயர் உண்டாகின்றன.
திருநங்கைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு புதுச்சேரி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது புதுச்சேரியில் 500க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். ஆனால் 79 பேருக்கு மட்டுமே வாக்குரிமை உள்ளது. இதனால் அரசின் திட்டங்கள் கூட அவர்களுக்கு சரியாக சென்றடைவதில்லை. இதேபோல் வேலை வாய்ப்புகளும் திருநங்கைகளுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது.
இந்நிலையில், சமுதாயத்தில் திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கிலும் புதுச்சேரியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் திருநங்கைகளை ஈடுபடுத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.
இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என போலீஸ் சீனியர் எஸ்பி ராஜிவ் ரஞ்சன் (போக்குவரத்து, சட்டம்-ஒழுங்கு) தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்தும் பணியில் திருநங்கைகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கு அது குறித்து முறையாக பயிற்சி வழங்கப்பட்டு இன்னும் 10, 15 நாட்களில் பணியில் ஈடுபடுவார்கள்.
மேலும் அவர்களுக்கு தனியாக சீருடை வழங்குவதுடன், ஊர்க்காவல் படையினருக்கு நிகரான ஊதியம் வழங்கப்படும். இந்த பணியில் 50 முதல் 100 திருநங்கைகள் ஈடுபடுவார்கள்.
வாகன நிறுத்தங்களை ஒழுங்குபடுத்துவது, சிக்னலில் நெரிசலை கட்டுப்படுத்துவது போன்ற பணிகளை அவர்கள் செய்வார்கள். இது தொடர்பாக திருநங்கைகளை அழைத்து கூட்டம் நடத்தியுள்ளோம். விருப்பமுள்ளவர்களை இந்த பணியில் பயன்படுத்திக் கொள்வோம்.
தற்போது சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு சமூகத்தில் மரியாதை கிடைக்கச் செய்யவும், வருமானத்துக்கு வழி ஏற்படுத்தித் தரவும் இந்த திட்டம் உதவும். அவர்களை அனைவரும் சக மணிதர்களாக கருதவும் இத்திட்டத்தின் மூலம் திருநங்கைகளின் மதிப்புக் கூடும்’’ என்றார்.
இதுபற்றி ஷீத்தல் நாயக் என்ற திருநங்கையிடம் கேட்டபோது, ‘‘புதுச்சேரியில் திருநங்கைகளுக்கு எந்த சலுகைகளும் இல்லாவிட்டாலும் தற்போது போக்குவரத்து பணியில் ஈடுபடுத்தப்படுவது என்பது வரவேற்கத்தக்கது. இது சமுதாயத்தில் மதிக்கத்தக்கதாகவும் இருக்கும். சமுதாயத்தை காக்கக்கூடிய பணியை வழங்குவது என்பது பெரிய வரப்பிரசாதமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. இதுவே எங்களுக்கு நிரந்தர அரசு பணியாக வழங்கினால் நன்றாக இருக்கும்.
சமீபத்தில் திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டை புதுச்சேரியில் கொண்டுவர வேண்டும். அதேபோல் புதுச்சேரியில் திருநங்கைகள் குறித்து கணக்கெடுப்பு செய்து அரசு சலுகைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.